காணாமல் போன சிறுமி வழக்கு; 10 நாட்களுக்குப் பிறகு சிபிசிஐடிக்கு மாற்றம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி, கடந்த 12-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல் போனார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தீவிரமாக தேடி வருகின்றனர். காணாமல்போன சிறுமியை மீட்பதற்காக 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள வயல்வெளிகள், கரும்புத் தோட்டங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தேடினர். எனினும், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை..

சிறுமி காணாமல் போய் 10 நாட்களாகியும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை (21-10-26) உத்தரவிட்டாா். அதனடிப்படையில், காணமல் போன சிறுமி குறித்து சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்க உள்ளது.