காதலனை தாக்கி காதலி கூட்டு பாலியல் பலாத்காரம்: வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், காதலனை சரமாரியாக தாக்கி, காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான வேளாண்துறை தென்னம்பண்ணை உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், அங்கு சமூக விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது. இந்நிலையில், 2025ம் ஆண்டு செப்., மாதம், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், அவரது காதலன் 24 வயது வாலிபர் ஆகியோர் அங்கு தனிமையில் இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மூன்று வாலிபர்கள், காதலனை சரமாரியாக தாக்கி மயக்கம் அடைய செய்தனர். பின், இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடமிருந்து தப்பிய இளம்பெண், அருகே வசிக்கும் மக்களிடம் கூற, பொதுமக்கள் வருவதற்குள் மூவரும் தப்பி ஓடினர்.

மயங்கி கிடந்த காதலன், பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக, ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டது அவரக்கரை கிராமத்தைச் சேர்ந்த ராஜா,24, சிவராஜ்,27, பார்த்திபன்,27, ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை இன்று (செப்.2) நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட மூவரின் மீதான குற்றமும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1.40 லட்சம் ரூபாய் அபராதமும், சிவராஜ் மற்றும் ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1.30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Source link