காந்தியின் பெயரில் ராகுலின் இன்றைய நாடகம்!

-நமது நிருபர்-

‘பிரதமர் வீட்டின் முன் நடத்திய போராட்டம் நேர்மையற்றது’ என்று சோனம் வாங்சுக் மனைவியால் விமர்சிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன் இன்றைய நாடகத்தை காந்தி ஸ்மிருதியில் தொடங்கியுள்ளார்.

டில்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியபோதும், ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அங்கு செல்லவில்லை. சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தபோதும், அவரது உடல் நலம் மோசமான போதும் எவரும் கண்டுகொள்ளவில்லை. போராட்டம் தீவிரமாகி மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் தான், ராகுலுக்கு விழிப்பு வந்திருக்கிறது. உடனடியாக தன் பங்குக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் வீட்டின் முன் தர்ணாவில் உட்கார்ந்து விட்டார்.

அப்போதும் கூட, அவரிடம் நேர்மையில்லை. பிரதமர் வீட்டின் முன் போராட்டம் என்றால் போலீசார் கைது செய்து விடுவர் என்று அஞ்சி, கார்கே வீட்டுக்கு போவதாக கூறிச் சென்றார். அப்படி சென்றவர்தான், பிரதமர் வீட்டின் முன் சென்று கட்சியினருடன் அமர்ந்து விட்டார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என்ற மரியாதைக்காக, அவரிடம் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் வந்து பேச்சு நடத்தினார். ஆனால், ராகுலோ, தன் கோரிக்கைகளை முன்னுக்குப் பின் முரணாக வைத்துக் கொண்டிருந்தார். அதனால் பேச்சு முறிந்து போனது.

இப்போதும், தன் பங்கேற்பு இல்லாமலேயே போராட்டம் தீவிரமாக நடப்பதை புரிந்து கொண்ட ராகுல், மீண்டும் தன் நாடகத்தை அரங்கேற்ற முயற்சிக்கிறார். இந்தியா கேட் செல்வதாக கூறி அவர் புறப்பட்டதும், அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். காந்தி நினைவிடத்திற்கு செல்வோம் என்றதையும் போலீசார் மறுத்தனர்.

பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் வந்ததால் போலீசார் வேறு வழியின்றி பின் வாங்கினர். இதையடுத்து அவர்கள் புறப்பட்ட வாகனத்தை காந்தி ஸ்மிருதிக்கு செல்ல அனுமதித்தனர். தற்போது அவர்கள் அனைவரும் காந்தி ஸ்மிருதி முன்பாக தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். காந்தியின் பெயரில் ராகுலின் இன்றைய நாடகம் நடந்து வருவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Source link