காமகோடியை விமர்சிக்கும் தகுதி கொண்டவரா பிரியங்கா?

-நமது நிருபர்-

என்டிஏ தேர்வுகளை சீரமைப்பது தொடர்பாக, நந்தன் நீலகேனி தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.இக்குழுவில், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா, ” இந்தியாவில் தேர்வு முறையை சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் உளவுத்துறை தலைவர், தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆகியோருடன் பசு கோமியம் நிபுணரும் இடம்பெற்றுள்ளார் என விமர்சித்துள்ளார்.சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியை தான் அவர் இவ்வாறு சிறுமைப்படுத்தி பேசியுள்ளார்.

காமகோடி கல்வித்தகுதி

காமகோடி, ஐஐடி கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில், சென்னை ஐஐடியில் எம்எஸ் மற்றும் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார். 2001ல் இந்த நிறுவனத்தில் இணைந்தார். 2022ல் ஜனவரி மாதம் இயக்குனராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.கணினி கட்டமைப்பு, தகவல் பாதுகாப்பு மற்றும் VLSI வடிவமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

சென்னை ஐஐடியின் மைக்ரோபிராசஸர் மேம்பாட்டு திட்டம் மற்றும் அதன் தகவல் பாதுகாப்பு கல்வி அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இறக்குமதி செய்யப்படும் சிப்களுக்கு சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் வகையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிப்பான, சக்தி என்ற இந்தியாவின் முதல் மைக்ரோபிராசஸர் உருவாக்கிய குழுவிற்கும் தலைமை தாங்கினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வகித்துள்ளார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அமைத்த ஏஐ பணிக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.

சென்னை ஐஐடியில், ஜேஇஇ தலைவராக பதவி வகித்துள்ள காமகோடி, தொழில்துறை ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் அசோஸியேட் டீன் ஆகவும் பணியாற்றி உள்ளார்.

ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பங்குச் சந்தையின் தொழில்நுட்ப குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச இதழ்கள் மற்றும் மாநாடுகளில் 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார். முனைவர் மற்றும் ஆராய்ச்சி படிக்கும் ஏராளமான மாணவர்களுக்கு வழிகாட்டி உள்ளார்.

பத்மஸ்ரீ விருது, டிஆர்டிஓவின் சிறப்பு விருது, அப்துல் கலாம் தொழில்நுட்ப புத்தாக்க தேசிய ஆய்வு பெல்லோஷிப், ஐபிஎம் பேராசிரியர் விருது மற்றும் வாஸ்விக் தொழில்துறை ஆராய்ச்சி விருது உள்ளிட்டவற்றையும் காமகோடி பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு பசுக்கள் காப்பகத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய காமகோடி, நாட்டு மாடுகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்துப் பேசியதோடு, பசுவின் சிறுநீருக்கு பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் செரிமானப் பண்புகள் இருப்பதாகக் கூறினார். அதைத்தான் பிரியங்கா குறிப்பிட்டு காமகோடியை விமர்சனம் செய்துள்ளார்.

தான் கற்ற கல்வியாலும், அறிவுக்கூர்மையாலும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் நிபுணராக, கல்வியாளராக உயர்ந்தவர் காமகோடி. அவரை, ஆட்சி அதிகாரம் தந்த பல்வேறு வசதி வாய்ப்புகள், பிரத்யேக சலுகைகளை பயன்படுத்தி பெயரளவுக்கான பட்டப் படிப்புகளை மட்டும் படித்த பிரியங்கா விமர்சனம் செய்து பார்லியில் பேசி இருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா கல்வித்தகுதி

பிரியங்கா,டில்லி ஜீசஸ் மேரி கல்லூரியில் சைக்காலஜி பிஏ பட்டமும், பிரிட்டன் சுந்தர்லாந்து பல்கலையில், பௌத்த மதம் தொடர்பான முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார்.

Source link