தளபதி விஜய் நடிப்பில் வெளியான கடைசி படமான ஜன நாயகன், கடந்த ஜூலை 23-ந் தேதி வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றி வரும் விஜயின் தீவிர ரசிகர்கள், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்து வருகின்றனர். தங்களின் அன்பு நடிகரின் “கடைசி திரை நடனத்தை” காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
அரசியல் பணிகளில் முழு கவனம் செலுத்தும் நோக்கில் சினிமாவுக்கு விடை கொடுத்துள்ள விஜயின் இறுதிப் படமாக ‘ஜன நாயகன்’ அமைந்துள்ளது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வரும் இப்படம் இதுவரை ரூ.233 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இதற்கிடையில், படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை விரைவில் வெளியிட தயாரிப்புக் குழு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் ரசிகர்களிடையே “தளபதி கச்சேரி” கொண்டாட்டத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதை இயக்குநர் எச். வினோத், சென்னை நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் அறிவித்தார்.
‘ஜன நாயகன்’ நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில் வெளியீடு
விழாவில் தொகுப்பாளர், “படத்தில் ஏதேனும் காட்சிகள் நீக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியபோது, ஏற்கனவே 183 நிமிடங்கள் (3 மணி 3 நிமிடங்கள்) ஓடும் திரையரங்கு பதிப்பிலிருந்து மொத்தம் ஆறு காட்சிகள் நீக்கப்பட்டதாக இயக்குநர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மொத்தம் ஆறு காட்சிகள் உள்ளன. அவை விரைவில் வெளியாகும். அதில் விஜய் நடித்த இரண்டு நகைச்சுவைக் காட்சிகள், இரண்டு அதிரடி காட்சிகள் மற்றும் இரண்டு உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடும்,” என்றார்.
அதனைத் தொடர்ந்து, “இயக்குநர் அனுமதி அளித்தால் தயாரிப்பாளரும் நிச்சயமாக வெளியிட சம்மதிப்பார்” என்று தொகுப்பாளர் கூறியபோது, அதற்கு வினோத், “அந்தக் காட்சிகளை முழுமையாக தயார் செய்து தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்போம். அடுத்த வாரம் முதல் அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன்,” என்று பதிலளித்தார்.
நட்சத்திர பட்டாளத்துடன் உருவான ‘ஜன நாயகன்’
இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி டியோல், பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி மற்றும் நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தத் திரைப்படம் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தை ஓரளவு தழுவி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் வசூல் நிலவரம்
திரைப்பட வசூல் கண்காணிப்பு நிறுவனமான Sacnilk வெளியிட்ட தகவலின்படி, ‘ஜன நாயகன்’ திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.233.24 கோடி வசூல் செய்துள்ளது. இருப்பினும், விஜயின் சமீபத்திய படங்களின் வசூலுடன் ஒப்பிடுகையில், இந்த அரசியல் அதிரடி திரைப்படத்தின் வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் என்.டி.டிவி-க்கு அளித்த பேட்டியில் இயக்குநர் எச். வினோத் கூறுகையில், திரைப்பட வரலாற்றைப் பார்த்தால், வெளியாகும் படங்களில் சுமார் 10 சதவீதம் மட்டுமே வெற்றி பெறுகின்றன. எந்தத் திரைப்படத் துறையிலும் வெற்றி விகிதம் 10 முதல் 20 சதவீதம் வரைதான் இருக்கும். சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு இயக்குநரும், படைப்பாளரும் நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற நேர்மையான எண்ணத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் உழைக்கிறார்கள். சில நேரங்களில் அது வெற்றி பெறுகிறது; சில நேரங்களில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
