ஜப்பானின் தெற்கு தீவான கியூஷுவில் (Kyushu) உள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. கடல் பரப்பிற்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எகிப்து தங்க உலகத்தை பார்க்க படை எடுக்கும் மக்கள்… 48 மணி நேரம் தான் கெடு; இந்தியர்களை ஒதுக்கி வைத்த அரசு
3.28 அடி உயரத்திற்கு சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளுக்கு 3.28 அடி உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் ஏற்கனவே இந்த அளவிற்கு அலைகள் பதிவாகியிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
கட்டிடங்கள் சேதம் – பிரதமர் உத்தரவு
ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி, நிலநடுக்கத்தால் சில இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், சேத விவரங்களை விரைவாகக் கணக்கிடுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் மீட்புப் பணிகளில் எந்தத் தாமதமும் இருக்கக் கூடாது என்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அணுமின் நிலையங்களின் நிலை என்ன?
தென்மேற்கு ஜப்பானை நிலநடுக்கம் உலுக்கிய நிலையில், அங்கிருக்கும் அணுமின் நிலையங்களில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று ஜப்பான் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தெரிவித்துள்ளது. கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓய்டா மற்றும் மியசாக்கி ஆகிய 7 மாகாணங்களுக்கு அவசர நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் 2-வது நிலநடுக்கம்
கடந்த ஜூன் 25 அன்று, வடக்கு ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 20 அன்று, 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் காயமடைந்தனர். பசிபிக் ‘நெருப்பு வளையத்தில்’ (Ring of Fire) அமைந்துள்ள ஜப்பான், உலகின் 18% நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் பகுதியாகும். 2011-ஆம் ஆண்டு 9.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட ஃபுகுஷிமா சுனாமி பேரழிவை அந்நாடு இன்னும் மறக்கவில்லை.
