காரைக்குடி: திருடன் ஆட்சியில் இருக்கும் போது, தான் கொள்ளையடித்த பணத்தை ஒரு ஓட்டுக்கு ரூ.500, ரூ.ஆயிரமாக கொடுப்பான் என்று காரைக்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; மற்ற அரசியல் கட்சிகளைப் போல நாங்கள் இல்லை. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, லட்சியவாதிகள், புரட்சியவாதிகள். ஆள் மாற்றம், ஆட்சிமாற்றத்திற்கு வந்த அரசியல்வாதிகள் அல்ல. ஆட்சி முறை மாற்றத்திற்கு வந்த லட்சியவாதிகள். அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த தேர்தலின் போது, காங்கிரஸ் ஓட்டுக்கு பணம் கொடுத்ததா? அங்குள்ளவர்கள் மாண்புமிகு ஜனநாயகவாதியாக இருக்கிறான்.
இங்கு நேர்மையாளன் ஆட்சியாளனாக இருக்கும் போது, மக்களும் நேர்மையானவனாக இருக்க விரும்புவான். ஒரு திருடன், மோசமானவன், அறிவற்றவன், ஒழுக்கமற்றவன் நாட்டை ஆளும் போது, நாட்டு மக்களும் அதே போன்று இருக்க வேண்டும் என்று விரும்புவான். ஏனென்றால், என்னை கேள்வி கேட்க எந்தத் தகுதியும் நாட்டு மக்களுக்கு இருக்கக் கூடாது என்று விரும்புவான். நான் ஊழல் செய்கிறேன், லஞ்சம் பெறுகிறேன், அதைக் கேட்க என் மக்களுக்கு தகுதி இருக்கக் கூடாது. அப்போது, நான் அடித்த கொள்ளையில் மக்களுக்கு பங்கு. அந்தப் பங்கு தான் ஓட்டுக்கு கொடுக்கப்படும் ரூ.1,000, ரூ.500.
பயந்து சாகுறயா இல்லையா? நான் தனியாக தானே நிற்கிறேன். திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜ தனித்தனியா நிற்கட்டும். யார் கொடி பறக்குது என்று பார்த்து விடலாம். இந்த ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் ஓட்டு எவ்வளவு என்று சொல்ல முடியுமா? நாங்க சொல்வோம், 36 லட்சம் எங்கள் ஓட்டு. ஜாதி, மதம் சொல்லாமல், சாராயம், பணம் கொடுக்காமல், இலவசம் தருகிறோம் என்று ஏமாற்றாமல் தன்மானம் மிக்கவர்கள் என் மக்கள். நானும் ஏமாற்றலாம் என்று முடிவு செய்து விட்டேன்.
வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், குடும்ப தலைவிக்கு 1 கிலோ தங்கம். தாலிக்கு தங்கம் இல்லை, தாலிக்கு வைரம். புதுமண தம்பதிகள் எந்த நாட்டுக்கு செல்ல விரும்புகிறார்களோ, அரசு செலவில் ஹனிமூன் அழைத்து செல்லப்படும். எவ்வளவு மானங்கெட்டத் தனமாக இருக்கிறது, என்று கிண்டலாக வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
