‘கார்கேவின் சாதியே எங்களுக்கு தெரியாது’… சுத்தி யாகம் சர்ச்சை குறித்து புதிதாக உருவான ‘ராம் சேனா’ அமைப்பு சமாளிப்பு

Written by: Vidheesha Kuntamalla

முன்னாள் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) நிர்வாகி, பி.பி.ஓ துறையின் முன்னாள் ஊழியர், இளங்கலை வணிகவியல் பட்டதாரி எனப் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட நபர்கள்தான் இந்த ‘ஸ்ரீ ராம் சேனா தர்மார்த்த சேவா நியாஸ்’ அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்கள். கடந்த மாதம் உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேரணி நடைபெற்றது. அதன்பின்னர் அந்த மைதானத்தில் நடத்தப்பட்ட புனிதப்படுத்துதல் சடங்கால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் முறையாகப் பதிவு செய்யப்பட்ட இந்த நியாஸ், ‘தன்னார்வ’ அமைப்பாக இயங்கி வருவதாக அதன் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அமைப்பின் செயலாளர் ராம்ஜீ அவஸ்தி கூறுகையில், எங்கள் அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட 7 உறுப்பினர்கள், 11 தீவிர களப்பணியாளர்கள் மற்றும் சுமார் 45 தன்னார்வலர்கள் உள்ளனர்; உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் பொதுமக்களின் நன்கொடைகள் மூலமே நிதி திரட்டப்படுகிறது என்றார்.

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று மறுக்கும் இந்த அமைப்பு, பசுக்களுக்கான அவசர ஊர்தி (Cow Ambulance) இயக்குவது மற்றும் ஆண்டுதோறும் 5 முதல் 10 மாணவர்களின் கல்விக்கு உதவுவது ஆகியவற்றைத் தங்களின் முக்கியப் பணிகளாகப் பட்டியலிடுகிறது. இந்த அமைப்பின் 7 முக்கிய நிர்வாகிகளில் 5 பேரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நேரில் தொடர்பு கொண்டது. மற்ற இருவர் ஊடகங்களிடம் பேச விரும்பவில்லை எனக் கூறி அவர்களது விவரங்களை அமைப்பு பகிர மறுத்துவிட்டது.

பொறுப்பாளர்கள் யார் யார்?

அமைப்பின் செயலாளர் ராம்ஜீ அவஸ்தி, 2018-19 காலகட்டத்தில் வி.ஹெச்.பி-யின் மாவட்ட ‘சேவா பிரமுக்’ ஆகப் பணியாற்றியவர். டெல்லியில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிய எம்பிஏ பட்டதாரியான இவர், தற்போது ஹல்த்வானியில் சொந்தமாகத் தொழில் நடத்தி வருகிறார். நியாஸில் இணைவதற்கு முன் வி.ஹெச்.பி-யில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். நாங்கள் மக்கள் நலனுக்காக மட்டுமே உழைக்கிறோம்; எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என்கிறார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அமைப்பின் தலைவர் கிரிஷ் பாண்டே (42) பி.சி.ஏ பட்டதாரி; டெல்லியில் உள்ள பிபிஓ துறையில் பணியாற்றியவர், தற்போது தொழிலதிபராக உள்ளார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் விலங்குகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்னைகள் மீதான அக்கறையினால் இந்த அமைப்பைத் தொடங்கியதாக கூறும் பாண்டே, நாங்கள் என்ன செய்தாலும், அது இந்துக்களின் நலனுக்காகவே இருக்கும் என்பதை அமைப்பின் பிரதான கொள்கையாகக் குறிப்பிடுகிறார். அரசியல் தொடர்பு குறித்துப் பேசிய அவர், நான் யாருக்கு வாக்களிக்கிறேன் என்பது எனது தனிப்பட்ட உரிமை; எந்தக் கட்சிக்கும் நான் பொறுப்புக் கூற வேண்டியதில்லை என்றார்.

மேலும் கார்கே குறித்துப் பேசிய பாண்டே, கார்கே எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்று கூட எங்களுக்குத் தெரியாது. எங்க அமைப்பு யாரிடமும் சாதி கேட்பதில்லை; அனைத்துத் தரப்பு மக்களும் இங்கு உள்ளனர். ஆகஸ்ட் 9 அன்று நானே மைதானத்தைப் பெருக்கித் துடைத்தேன். எங்கள் நோக்கம் அந்த இடத்தை தூய்மைப்படுத்துவது மட்டுமே. ராகுல் காந்திக்கு எதிராகப் புகார் அளித்த அமித்தும் இந்தச் சடங்கில் பங்கேற்றார் என்றார். இவ்வமைப்பின் உறுப்பினரான தலித் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த அமித் குமார், ‘சுத்திகரிப்பு’ சடங்கை விமர்சித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.

அமைப்பின் செய்தித் தொடர்பாளரான லதா பந்த் (45), குமாவோன் பல்கலைக்கழகப் பட்டதாரி மற்றும் சமூகப் பணியில் முதுகலை (MSW) படித்து வருபவர். நாங்கள் அனைவரும் சாதாரணமாக வாழ்ந்து கனவுகளைச் சுமக்கும் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எந்தக் கட்சியுடனும் தொடர்பில்லை என்கிறார் இவர். பொருளாளரான நரேந்திர நேகி (43), சண்டிகரில் மனிதவள (HR) துறையில் பணியாற்றிவிட்டு, தற்போது சொந்த ஊரான ஹல்த்வானியில் மனிதவளத் தொழில் நடத்தி வருகிறார். வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் அல்லது பா.ஜ.க-வுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கும் இவர், கல்லூரிக் கால நண்பரான கிரிஷ் பாண்டேவுடன் இணைந்து ஏழைகளுக்கு உதவவே இந்த அமைப்பைத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

நிர்வாகிகளில் இளையவரான விஜய் ஃபர்தியால் (25), அல்மோராவைச் சேர்ந்த பிகாம் பட்டதாரி. ஹல்த்வானியில் குடும்பத்தின் செல்போன் கடை நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் அமைப்பில் இணைந்த இவர், எங்கள் பணிகளில் ஏழை எளியவர்களின் திருமணங்களுக்குப் பாத்திரங்கள் வழங்கி உதவுவது, உணவு வழங்குவது, ஆம்புலன்ஸ் சேவை மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவது ஆகியவையும் அடங்கும். ‘சுத்திகரிப்பு’ விவகாரத்தை மட்டுமே பெரிதுபடுத்துவது தவறானது என்கிறார்.

சர்ச்சையான ‘சுத்திகரிப்பு’ சடங்கு பின்னணி:

ஆக.8 அன்று நடைபெற்ற கார்கேவின் பேரணிக்கு மறுநாள், நியாஸ் அமைப்பின் வாட்ஸ்அப் குழுவில் ஒரு செய்தி பகிரப்பட்டது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனத் தொடங்கிய அந்தச் செய்தியில், ராம்லீலா மைதானம் இந்து மத வழிபாட்டுக்கான புனிதம் வாய்ந்தது என்றும், அங்கு நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மத நம்பிக்கைகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு, வேற்று மதத்தினர் வந்ததால் மைதானத்தின் புனிதம் கெட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து, மறுநாள் காலை 11 மணிக்கு அங்கு ‘சுத்தி யாகம்’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஆக.9 அன்று மைதானம் தூய்மைப்படுத்தப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டது.

அரசியல் மோதலும் சட்ட நடவடிக்கைகளும்

பாஜக ஆளும் உத்தராகண்டில், தலித் தலைவரான கார்கேவுக்கு எதிராக இழைக்கப்பட்ட தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாடு இது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஆகஸ்ட் 29 அன்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அப்பட்டமான தீண்டாமை செயல்; இதன்மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலடியாக, அமைப்பின் உறுப்பினரான அமித் குமார், தலித் மக்களை ராகுல் காந்தி இழிவுபடுத்துவதாகக் கூறி எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். பேரணி முடிந்த பிறகு ராம்லீலா மைதானத்தில் குப்பைகளும் மதுபாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டதால், கலாசார புனிதத்தை மீட்கவே யாகம் நடத்தப்பட்டதாகவும், இதில் கார்கேவின் சாதிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த தானும் இதில் பங்கேற்றதாகவும் அமித் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஆக.31 அன்று காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் பாண்டே மற்றும் அடையாளம் தெரியாத 15 பேர் மீது அவதூறாகவும் தீண்டாமையை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனினும், அந்தப் புகாரின் மீது இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து ஹல்த்வானி காங்கிரஸ் எம்.எல்.ஏ சுமித் ஹ்ரிதயேஷ், காவல்துறையின் ஒருதலைப்பட்ச செயல்பாடு தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸ் அளித்த புகாரை ஏற்காமல், ராகுல் காந்தி மீது மட்டும் மிக எளிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்துத் தெரிவித்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், காந்தி மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர் முதல்கட்ட விசாரணையில் உள்ளது. காங்கிரஸ் அளித்த புகார்களைச் சட்ட ரீதியாகப் பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Source link