‘கார்த்திகா எங்களையும் விமர்சித்தார்; இப்படி பெண் தலைவர்களை கைது செய்து வாய்ப் பூட்டு போட நாங்கள் நினைக்கவில்லை’: ஸ்டாலின் கண்டன அறிக்கை

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இடைத்தேர்தலின்போது, தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள சென்றனர். அதற்கு அனுமதி மறுத்த போலீசார் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதியில் அனுமதி வழங்கப்படாது எனவும் போலீசார் தெரிவித்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் பிரசாரத்தை தடுக்கும் விதத்திலேயே போலீசார் செயல்பட்டு வருவதாகவும், ஒருதலைபட்சமாக போலீசார் செயல்படுவதாகவும் கூறி, அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கார்த்திகா கைது

இந்நிலையில் முதலமைச்சர் பயணிக்கும் சாலையில் மறியலில் ஈடுபட்டது, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் போலீசார் அவரையும், அவரது கணவரையும் கைது செய்தனர். விசாரணைக்காக தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கைதுக்கு தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஸ்டாலின் கண்டனம் 

நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கைதுக்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.

இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.

நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.

குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார். 

Source link