கார் ரேஸ் தொடங்கியதும் டிராக்கில் ஓடிய விஜய்.. சில்வர்ஸ்டோனில் நடந்தது என்ன? இதுதான் காரணம்!

லண்டன்: கார் ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு, முதல்வர் விஜய் திடீரென ரேஸ் டிராக்கிலேயே ஓடி வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெற்ற லீ மென்ஸ் கோப்பை கார் பந்தய நிகழ்வில்தான் இது நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டுக்கு சென்ற அவர், அங்கு நடைபெற்ற கார் பந்தயத்தை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணியும் பங்கேற்றது. இதனால் விஜய்-அஜித் சந்திப்பை காண இருவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை நடிகர் அஜித் குமார் நேரில் சந்தித்து ஆரத்தழுவி வரவேற்றார். அஜித்தை பார்த்ததும் விஜய்யும் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். விஜய்யுடன் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் அஜித் குமார் ஆரத்தழுவி வரவேற்றார். இந்த சந்திப்பை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

இதன் பின்னர் கார் ரேஸ் நடைபெறும் டிராக்கிலும் விஜய் மற்றும் அஜித் சந்தித்துக் கொண்டனர். அதாவது ரேஸில் பங்கேற்கும் அஜித் காருக்குள் ரெடியாக டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அஜித்தின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற விஜய், காரில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அஜித்துக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து போட்டியை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். அவர் பச்சைக்கொடியை அசைத்து ரேஸை தொடங்கி வைத்தார். இருப்பினும், அவர் தொடங்கி வைத்தபோது கார்கள் சென்றது பார்மேஷன் லேப்க்கு தான். உண்மையான ரேஸிற்கு இல்லை. அதாவது பார்மேஷன் லேப் என்பது உண்மையான போட்டி தொடங்குவதற்கு முன்பு நடைபெறும். போட்டியாளர்கள் தங்களது கார்களுடன் டிராக்கை சுற்றி, ரேஸ் ஆரம்பிக்கும் இடத்தை நோக்கி செல்வார்கள். அந்த கேப்பிற்குள் டிராபிக் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறிவிடலாம்.

இதற்கு பிறகு தனியாக ஸ்டார்ட் சிக்னல் மூலம் உண்மையான ரேஸ் தொடங்கும். அதாவது விஜய் கொடியசைத்த வைத்தது உண்மையான ரேஸ் இல்லை.. அது பார்மேஷன் லேப் தான். முதல்வர் விஜய் என்றில்லை.. எந்தவொரு பிரபலம் ரேஸை தொடங்கி வைத்தாலும் இதுவே தான் நடைமுறை.

பார்மேஷன் லேப் தொடங்கிய பிறகு, முதல்வர் விஜய் டிராக்கில் இருந்து பார்வையாளர்கள் அமரும் பகுதிக்கு திரும்பினார். பொதுவாக ரேஸை தொடங்கி வைத்த பிறகு அனைவரும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள். ஃபிட்டாக இருக்கும் முதல்வர் விஜய், டிராக்கிலேயே ஓடி சென்றார். இது அங்கிருந்த ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதேபோல் நடிகை த்ரிஷாவும் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டுக்கு வந்திருந்தார். மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஏற்கனவே த்ரிஷா லண்டன் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்பு அஜித் குமார் கார் ரேஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்கும் நேரில் சென்றிருந்தார்.