காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வது தாமதம்; 'அர்னாப்' புயல் குறித்து வானிலை மையம் அப்டேட்!

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (அக்டோபர் 25), 8:30 மணி நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

பின், மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம், 5 கி.மீ.,யாக குறைந்தது. இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை, ‘அர்னாப்’ புயலாக மாறலாம். நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி, ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

16 மாவட்டங்களில்…

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை; ரேடார் திடீர் பழுது

சென்னை வானிலை ஆய்வு மையம், செயற்கைக்கோள் வரைபடங்கள் வாயிலாக மட்டுமல்லாது, ‘டாப்ளர் ரேடார்’ பயன்படுத்தியும், மழை குறித்த எச்சரிக்கைகளை வழங்கியது. இதனால், சென்னை மற்றும் வடமாவட்டங்களின் மேல், மழை மேகம் இருப்பது குறித்தும், அதன் அடர்த்தி அடிப்படையில், மழை குறித்த துல்லிய தகவல் பெறப்பட்டு, முன்னெச்சரிக்கை செய்யப்படும்.

வானிலை ஆய்வு மையம் சார்பில், சென்னை துறைமுக நிர்வாக அலுவலக கட்டடத்தின் மேல் தளத்தில் வைக்கப்பட்டுள்ள, ‘டாப்ளர் ரேடார்’ திடீரென பழுதானது. வானிலை ஆய்வு மைய இணையதளத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த, 2002ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ரேடாரை, முழுமையாக மாற்ற வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. தற்போது, ரேடார் பழுதான நிலையில், காரைக்காலில் உள்ள ரேடார் வாயிலாக, மழை எச்சரிக்கை தகவல்கள் பெறப்படுவதாக, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link