காலை 5 மணிக்குக் கதவைத் தட்டி காரில் ஏற்றிச் சென்றனர்: போலி இன்ஸ்டாகிராம் பதிவு விவகாரத்தில் போலீசார் துன்புறுத்தியதாக பேராசிரியர் புகார்

தனது போட்டோவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து த.வெ.க எம்.எல்.ஏ. குறித்து அவதூறான கருத்து பதிவிடப்பட்டதாகக் கூறி, அதிகாலையில் வீட்டுக்கு வந்து தன்னை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் கலையரசன், தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் கலையரசன் தமிழக டி.ஜி.பி-க்கு எழுதியுள்ள கடிதத்தில், 

என் பெயர் கலையரசன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். உங்கள் தலையீட்டைக் கோரி இந்த புகாரை எழுதுகிறேன்.

ஒரு பொருளாதார நிபுணராக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தி திரவிடியன் மாடல் (The Dravidian Model) உட்பட உலகளவில் புகழ்பெற்ற கல்விக் நூல்களையும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். இந்திய திட்டக் குழு (தற்போது நிதி ஆயோக்), தொழில் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (ISID, டெல்லி), லண்டன் கிங்ஸ் கல்லூரி, ப்ரவுன் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி பம்பாய் மற்றும் இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன்.

இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றியுள்ளேன். தொழில் கொள்கை மற்றும் தொழிலாளர் சந்தை குறித்து தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையிலும் பங்களித்துள்ளேன். தி இந்து மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

இன்று காலை (அக்டோபர் 28) சுமார் காலை 5 மணியளவில், சென்னை அடையாறில் உள்ள எனது இல்லத்தில் (A7, 4வது தெரு, நேரு நகர், அடையாறு) நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள் எனது கதவைத் தட்டினர்.

நான் கதவைத் திறந்ததும், அவர்கள் என் பெயரைக் கேட்டனர். நான் அதை உறுதிப்படுத்திய உடனே, சமூக ஊடகப் பதிவு குறித்த விசாரணைக்காகப் பம்மலில் உள்ள T4 சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூறி, எனது கைபேசியைப் பிடுங்கிக் கொண்டனர். இந்த விசாரணைக்கு அதிகாரமளிக்கும் எவ்வித ஆவணத்தையும், புகார் நகலையோ அல்லது முதல் தகவல் அறிக்கையையோ (FIR) கூட அவர்கள் எனக்கு வழங்கவில்லை. எனக்கு அறிமுகமே இல்லாத ஓர் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பல்லாவரம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஜே. காமாட்சிக்கு எதிராக நான் அவதூறான கருத்துப் பதிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அந்த சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது அவருடைய சமூக ஊடகக் கணக்குகளையோ எனக்குத் தெரியாது; உண்மையில், அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. எனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்று விளக்க முயன்றேன். ஆனால், என் பேச்சைக் கேட்காமல், எனது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாடகை காரில் (காவல்துறை வாகனம் அல்ல) என்னை ஏற்றி அழைத்துச் சென்றனர்.

எனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கக்கூட அவர்கள் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. வாகனம் கிண்டியைக் கடந்தபோது, குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள எனது கைபேசியைத் திருப்பித் தருமாறு கேட்டேன். பலமுறை கோரிய பிறகு, சில நிமிடங்கள் மட்டும் கைபேசியைப் பயன்படுத்த அனுமதித்தனர்; அதற்குள் என்ன நடக்கிறது என்பதை எனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.

அதற்குள் வாகனம் பல்லாவரத்தை அடைந்தது. அங்கு சாலையோரத்தில் சுமார் 45 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். அவர்கள் பல தொலைபேசி அழைப்புகளைச் செய்தனர், அவர்களுக்கும் பல அழைப்புகள் வந்தன. அதன்பின்னர், என்னை மீண்டும் வீட்டில் கொண்டு போய் விடுமாறு உத்தரவு வந்துள்ளதாகக் கூறினர். திரும்பி வரும் வழியில், இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பதிவிடப்பட்ட அவதூறு கருத்தின் ஸ்கிரீன்ஷாட்டை எனக்குக் காட்டினர். அந்த கணக்கில் எனது புகைப்படம் சுயவிவரப் படமாக (Profile Picture) இருந்தது, ஆனால் @youvijayamani என்ற வேறு பயனர் பெயர் (Username) இருந்தது; அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் ஆராய்ச்சிப் பணியாளராக இருந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து குற்றவாளி எனது புகைப்படத்தை எடுத்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. எனது வீட்டிற்கு வந்தடைந்ததும், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாகக் தருமாறு கேட்டுக் கொண்டனர். அந்த கணக்கு என்னுடையது அல்ல என்றும், எனது புகைப்படத்தைக் கொண்ட அத்தகைய இன்ஸ்டாகிராம் ஐ.டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் T4 சங்கர் நகர் காவல் ஆய்வாளருக்கு முகவரியிட்டு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தேன். அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரே எனது கைபேசியைத் திருப்பிக் கொடுத்தனர். காலை 7:45 மணியளவில் என்னை மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.

என்னிடம் விளக்கம் கேட்க நியாயமான வாய்ப்பு கூட வழங்கப்படாமல், நடத்தப்பட்ட விதம் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. மேலும், யாரோ ஒரு நபர் எனது புகைப்படத்தைப் தவறாகப் பயன்படுத்தி, போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, எனக்குத் தெரியாத ஒருவருக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டுள்ளதால், இந்த வழக்கில் நான் தான் பாதிக்கப்பட்டவன். அப்படியிருந்தும், அதிகாலையில் காவலர்கள் என் வீட்டிற்கு வந்து, இரவு ஆடையில் இருந்த என்னை அழைத்துச் சென்றது ஒரு குற்றவாளியைப் போல நடத்தும் விதமாக இருந்தது. இந்த முழு சம்பவமும் வெறும் இன்ஸ்டாகிராம் கணக்கு அல்லது போலி ஐ.டி.,யை உருவாக்குவது பற்றியது மட்டுமல்ல என்று நான் அஞ்சுகிறேன். மக்களை அச்சுறுத்தவும், அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும் உருவாக்கப்பட்ட போலி கணக்காகவும் இது இருக்கலாம்.

தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வரும் ஒருவன் என்ற முறையில், இத்தகைய செயல் பொது விவாதங்களிலும் கல்வி சார்ந்த செயல்பாடுகளிலும் மக்கள் பங்கேற்பதைத் தடுக்கும் என்று கவலைப்படுகிறேன். தவறு செய்யாத ஒருவரின் வீட்டுக் கதவை அதிகாலையில் காவலர்கள் தட்டி அழைத்துச் செல்ல முடியும் என்பது அச்சமூட்டுகிறது. இந்த சட்டவிரோத தடுப்புக்காவல், போலி ஐ.டி உருவாக்குதல், அவதூறான கருத்துகளைப் பதிவிடுதல் மற்றும் பொதுவெளியில் எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் ஆகியவற்றுக்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link