காவலர் நயன்தாரா… பவர்ஃபுல் வில்லி ரெஜினா –  வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ முன்னோட்டம்!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 

இப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் புராணக் கதைகள், நிழல் கால காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதிலும் புராணக் கதைகள் இடம் பெறக் கூடுதலா போர் காட்சிகளும் இடம் பெறுகிறது. 

முன்னோட்டம் ஆரம்பத்தில் ஊர்வசி ஊருக்கு காவலராக வரும் நயன்தாரா தனியாக தூங்கப் பயப்படுகிறார். அவருக்கு புராண கனவுகள் வந்து போக அதற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதனிடையே அவரைத் தேடி பவர்ஃபுல் வில்லியாக வரும் ரெஜினா அலைய பின்பு ஒரு கட்டத்தில் பிடித்து கொடுமைப் படுத்துகிறார். அப்போது நயன்தாராவோடு மாட்டிக்கொண்ட ஊர்வசியும் கொடுமைகளை அனுபவிக்க அம்மனை கூப்பிடச் சொல்லி நயன்தாராவிடம் கேட்க உடனே மூக்குத்தி அம்மன் எண்ட்ரி கொடுக்கிறார்.

பின்பு எதிரிகளை பழிவாங்கும் அவர் வில்லி ரெஜினாவை வீழ்த்தினாரா இல்லையா? அவருக்கும் ரெஜினாவுக்கும் என்ன தொடர்பு? இதில் புராணக் கதைகள் எப்படி வருகிறது? என்ற கேள்விகளை இந்த முன்னோட்டம் அடுக்குகிறது. அதோடு இறுதியில் மூன்று மூக்குத்தி அம்மன்கள் நடந்து வருகின்றன. அதனால் 3வது பாகமும் உருவாகுமோ என்ற யூகத்தையும் இந்த முன்னோட்டம் எழுப்புகிறது.