துாத்துக்குடி:
பெரிய வகை கப்பல் வருகையால், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தென் சீனா, வியட்நாம் நாடுகளுடன் கடல்சார் இணைப்பை வலுப்படுத்தி உள்ளது.
இதன் வாயிலாக, அந்த பகுதி ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளும் உருவாகி உள்ளன.
இது குறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் கூறியதாவது:
துாத்துக்குடி துறைமுகத்திற்கு ‘எம்.வி., நவதா பூம்’ என்ற கப்பல் கடந்த 18ம் தேதி வந்தது. சிங்கப்பூர் கொடியுடன் இயக்கப்படும் இக்கப்பல், 1,100 சரக்கு கன்டெய்னர் களைக் கையாளும் திறன் கொண்டது. 147.82 மீ., நீளமும், 23.38 மீ., அகலமும் கொண்ட இது, சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவை இணைக்கும் ரீஜினல் கன்டெய்னர் லைன் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
வாராந்திர அட்டவணையின்படி, சீனாவின் கின்ஷோ துறைமுகம், வியட்நாமின் ஹைபோங் துறைமுகம், துாத்துக்குடி துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், வியட்நாமின் சூலாய் துறைமுகங்களுக்கு இக்கப்பல் செல்லும்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களின் தேவையை பொறுத்து, பின்னர் வாரந்தோறும் இயக்கும் வகையில் சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இந்த கப்பல் சேவை அறிமுகம் வாயிலாக, தென் சீனா மற்றும் வியட்நாம் நாடுகளுடனான துறைமுகத்தின் கடல்வழி இணைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .
குறிப்பாக, சூரிய மின்தகடு உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழில்துறைகளுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
