தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகள் எவ்வளவு காலத்திற்குப் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து உரிய விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வடக்கு மல்லியக்கரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், ரேஷன் அரிசி கடத்துவதற்கு அனுமதிப்பதற்காக ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக, சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் ராமராஜன், உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார் மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தன் மீதான வழக்கில் உண்மை நிலை வெளிக்கொண்டு வர, புகார்தாரரான சக்திவேல் மற்றும் அவரது தாயாரின் செல்போன் அழைப்புப் பதிவுகளையும், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் முறையாகப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி, உதவி ஆய்வாளர் சரவணகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான தரப்பினர், தங்களது அலுவலகத்தில் கடந்த 15 நாட்களுக்கான சிசிடிவி கேமரா பதிவுகள் மட்டுமே தற்போது கைவசம் உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதவி ஆய்வாளர் தரப்பு வழக்கறிஞர், “நாட்டிலுள்ள காவல் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கட்டாயமாக 18 மாதங்கள் வரை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வெறும் 15 நாட்களுக்கான பதிவுகள் மட்டுமே பராமரிக்கப்படுவதாகக் கூறுவது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முற்றிலும் எதிரானது” என்று சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 18 மாதங்களுக்குப் பதிலாக வெறும் 15 நாட்களுக்கான சிசிடிவி பதிவுகள் மட்டுமே பராமரிக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் புலனாய்வு அலுவலகங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்திற்குப் பராமரிக்கப்படுகின்றன என்பது குறித்து விரிவான விளக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
