‘காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல்’ விடுத்ததாகக் கூறிய நபர் மறுநாளே கொல்லப்பட்டதன் பின்னணி

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பிரதீப் ராஜ்

பிரசுரிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“கடந்த 8ஆம் தேதி காவல் ஆய்வாளர் என்னை அழைத்தார். ‘இருவரும் மாறி மாறி வெட்டிக் கொல்லவிருப்பதாகத் தகவல் வந்தது’ என்றார். ‘அதற்கு ஆதாரம் உள்ளதா?’ எனக் கேட்டேன். என்னைக் கொன்று திருச்செந்தூர் கடலில் கரைத்துவிடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்”

திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு பேட்டியளித்த பிரதீப் ராஜ், மறுநாள் இரவு (செப்டம்பர் 9) சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். கடன் பிரச்னை காரணமாகத் தனது மகன் கொல்லப்பட்டதாகக் கூறும் இறந்துபோன நபரின் தாய், “கொலையின் பின்னணியில் காவல்துறை உள்ளது” என்கிறார்.

ஆனால், “காவல் ஆய்வாளர் மீது எந்தத் தவறும் இல்லை” என்கிறார், திருவொற்றியூர் சரக காவல் உதவி ஆணையர் பால்ராஜ்.

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த 29 வயதான பிரதீப் ராஜ், திரைப்படங்களில் துணை நடிகராகப் பணியாற்றி வந்துள்ளார். திரைப்பட வாய்ப்பு இல்லாத நேரங்களில் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதியன்று, திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதீப் ராஜ், தனது தெருவில் வசிக்கும் சிலருடன் உள்ள முன்பகை குறித்து சில தகவல்களைக் கூறியுள்ளார்.

இவரது தாய் ராணி, அதே பகுதியில் உள்ள நவநீதம் என்பவரிடம் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளதாகவும், ஆனால் தற்போது வரை 18 லட்ச ரூபாய் வரை பணத்தைக் கொடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கான வங்கி ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகக் கூறிய பிரதீப் ராஜ், “என் அம்மா வாங்கிய கடனுக்காக உள்ளூரில் குற்றப் பின்னணி உள்ள நபர்கள் என்னை மிரட்டினர்” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகம், திருவொற்றியூர் காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் கொடுத்ததாகக் கூறிய அவர், “ஆனால், அவர்களை (எதிர்த்தரப்பு) நான் தாக்கியதாக காவல் நிலையத்தில் பொய் வழக்குப் பதிவு செய்தனர்” என்றார்.

கடந்த ஜூலை 26ஆம் தேதி பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக நவநீதம் – ராணி தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவநீதம் அளித்த புகாரின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பிரதீப் ராஜ் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேச பிபிசி தமிழ் நவநீதத்தை தொடர்புகொள்ள முயன்றது. ஆனால் பலன் கிடைக்கவில்லை.

கடந்த ஜூலை 26 ஆம் தேதி பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக நவநீதம் - ராணி தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவநீதம் அளித்த புகாரின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பிரதீப் ராஜ் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, திருவொற்றியூர் காவல் நிலையம்

‘காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுத்தார்’

இந்த வழக்கைக் குறிப்பிட்டு பிரதீப் ராஜ் பேசியிருந்தார். தொடர்ந்து, கடந்த 8ஆம் தேதி திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு காவல் ஆய்வாளர் அலெக்ஸ் தன்னை அழைத்ததாக அவர் கூறினார்.

“அப்போது, இரு தரப்பும் வெட்டிக் கொல்லவிருப்பதாகத் தகவல் வந்தது’ என ஆய்வாளர் தெரிவித்தார். ‘அதற்கு ஆதாரம் உள்ளதா?’ எனக் கேட்டேன். அதற்கு, ‘கை, காலை வெட்டிவிடுவேன். உன்னைக் கொன்று திருச்செந்தூர் கடலில் கரைப்பேன்’ என கொலை மிரட்டல் விடுத்தார்” எனக் கூறினார்.

பேட்டியின்போது குற்றப் பின்னணி உள்ள நபர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்ட பிரதீப் ராஜ், “அவரிடம் சென்று பேசுமாறு ஆய்வாளர் கூறினார். தனக்குப் பிடிக்காத வழக்கறிஞரை காவல் நிலையத்துக்குக் கூட்டி வந்துவிட்டதாகக் கூறி ஆய்வாளர் என்னை அடித்தார்” எனக் குறிப்பிட்டார்.

கடன் பிரச்னை குறித்துப் பேசிய அவர், “நாங்கள் 18 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறுகின்றனர். வட்டிக்கு வட்டி போட்டுக் கேட்கின்றனர். அதற்கு காவல் நிலைய ஆய்வாளர் துணை போகிறார்” எனக் குற்றம் சுமத்தினார்.

“காவல் ஆணையர் அலுவலத்தில் தான் கொடுத்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை” எனக் கூறிய அவர், “அவர்கள் (எதிர்த்தரப்பு) என் வீட்டின் முன்பாக வந்து சண்டை போடும் சிசிடிவி காட்சிகள் உள்ளன” என்றார்.

“என் உயிருக்கு ஆபத்து உள்ளது. தமிழ்நாட்டில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனக்குப் பயமாக உள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் பிரதீப் ராஜ் தெரிவித்தார்.

அவர் பேட்டியளித்த மறுநாள், (செப்டம்பர் 9) இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பிரதீப் ராஜை இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் ஆயுதங்களால் தாக்கிக் கொன்றுள்ளனர்.

 ராணி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பிரதீப் ராஜின் தாய் ராணி

‘புகாரைக் கண்டுகொள்ளவில்லை’

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் உள்ளிட்ட காவல்துறையினர் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பிரதீப் ராஜின் தாய் ராணி, “என் மகனின் சாவுக்கு இவர்தான் காரணம்” என காவல் ஆய்வாளரை நோக்கிக் கூறியுள்ளார். அந்தக் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவியது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராணி, “இரு ஆண்டுகளாக பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. கடனுக்காக வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்” எனக் கூறினார்.

“என் மகன் சம்பாதித்த பணத்தையெல்லாம் அவர்களுக்கு (எதிர்த்தரப்பு) கொடுத்தேன். நாங்கள் கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் கண்டுகொள்ளவில்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என ராணி தெரிவித்தார்.

“என் மகன் இரண்டு மாதங்கள்கூட வாழ மாட்டான் என காவல் ஆய்வாளர் கூறினார். பெற்ற தாயாக இருந்து முதலமைச்சரிடம் பிச்சை கேட்கிறேன். என் மகன் கொலைக்கு நியாயம் வேண்டும்” எனக் கூறி அவர் அழுதார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே வீடியோ வெளியிட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்' எனப் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

அரசியல் கட்சிகள் விமர்சனம்

காவல் நிலையத்தில் புகார் அளித்த மறுநாளே இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் அரசியல்ரீதியாக பேசுபொருளாக மாறியது. தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே வீடியோ வெளியிட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனப் பதிவிட்டுள்ளார்.

“காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளனர். வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கந்துவட்டிக் கொடுமையால் தவித்து, உயிருக்குப் பயந்து காவல் நிலையம் சென்று உதவி கேட்ட நபரை, காவல் ஆய்வாளரே மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாக” கூறியுள்ளார்.

“குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்வதுடன் அவர்களுக்குத் துணை நின்ற காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் நயினார் நாகேந்திரன் கோரியுள்ளார்.

பிரதீப் ராஜ் கொலை தொடர்பாக, நவீன்குமார், ஹரி, ஜாஃபர், லோகேஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப் ராஜ் தரப்பினர் குற்றம் சுமத்தும் காவல் ஆய்வாளர் அலெக்ஸிடம் பேசுவதற்குப் பலமுறை பிபிசி தமிழ் அவரைத் தொடர்பு கொண்டது. ஆனால், அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை.

"இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்  நல்லது செய்யவே விரும்பினார். அவர் எச்சரித்த மறுநாள் கொலை நடந்துவிட்டது. இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனவும் காவல் உதவி ஆணையர் பால்ராஜ் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Handout

‘ஆய்வாளர் மீது எந்தத் தவறும் இல்லை’ – உதவி ஆணையர்

அதைத் தொடர்ந்து திருவொற்றியூர் சரக காவல் உதவி ஆணையர் பால்ராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், “காவல்துறை மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டியதாக இறந்துபோன நபர் கூறியிருந்தார். ஆனால், இருதரப்பினரையும் அழைத்து, ‘உங்கள் நடவடிக்கை சரியில்லை’ என காவல் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்” என்றார்.

அப்போது சில வழக்கறிஞர்களை அழைத்து வந்து பிரதீப் ராஜ் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தியதாகக் கூறும் அவர், “முன்பகையால் எதாவது நடந்துவிடும் என்ற நோக்கத்தில் காவல் ஆய்வாளர் செயல்பட்டுள்ளார். ஆனால், வழக்கறிஞர்களை அழைத்து வந்து ஊடகங்களுக்கு பிரதீப் ராஜ் பேட்டி அளித்துள்ளார்” எனக் கூறுகிறார்.

“புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் முன்கூட்டியே இந்தக் கொலையைத் தடுத்திருக்கலாமே?” எனக் கேட்டபோது, “இருவரும் சண்டை போட்டு வருவது தெரிந்ததால்தான் அவர்களை அழைத்து காவல் ஆய்வாளர் பேசியதாகவும்” தெரிவித்தார்.

“கந்துவட்டி பிரச்னை உள்ளதாகக் கூறுகிறார்களே?” என்று கேட்டபோது, “அப்படி எதுவும் இல்லை. இறந்துபோன நபரின் குடும்பத்தினரும் எதிர்த் தரப்பில் உள்ளவர்களும் சுமார் 15 ஆண்டுக்கால நட்பில் இருந்துள்ளனர்” எனக் கூறுகிறார்.

இரு தரப்பும் உணவகம் நடத்தி வருவதாகக் கூறிய உதவி ஆணையர் பால்ராஜ், “உணவகம் நடத்துவதற்குப் பணம் தேவை எனச் சிறிது சிறிதாக வாங்கியுள்ளனர். ஆனால், பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

“இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் நல்லது செய்யவே விரும்பினார். அவர் எச்சரித்த மறுநாள் கொலை நடந்துவிட்டது. இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனவும் காவல் உதவி ஆணையர் பால்ராஜ் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link