காவிரி டெல்டா மரபை மீறி 45 நாட்கள் தண்ணீர் திறப்பு: அறிவிப்பை திரும்ப பெற பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத் தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் இக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தகவல்கள் வருமாறு:

மேட்டூர் அணையில் முதலமைச்சர் தண்ணீரை திறந்து வைத்துள்ளார். இதனை மாவட்ட அளவில் வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி, குளம் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்பிட வேண்டும். ஒருபோக சம்பா சாகுபடிக்கு 15 தினங்களுக்குப் பிறகே விளைநிலங்களுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு மத்தியகால ரக பயிர்களை பயிரிடுவதற்கான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும்.

தற்போதைய நிலையில் காவிரி டெல்டாவில் கோடை மழை பெய்யாத காரணத்தால், கோடை உழவு செய்ய முடியாமலும் நேரடி விதைப்பு மேற்கொள்ள முடியாமலும் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 15 தினங்களுக்குப் பிறகு சாகுபடிக்குத் தண்ணீரைப் பாசனப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் வகையில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கதிர் வரும் நிலையில், பயிர்கள் பதராகாமல் பாதுகாக்க வேண்டும்.

காவிரி டெல்டா மரபை மீறி 45 தினங்களுக்கு மட்டுமே தண்ணீர் திறப்பு என்ற நீர்ப்பாசனத்துறையின் அறிவிப்பை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும். ஜனவரி 28 ஆம் தேதி வரை தண்ணீரைத் திறக்க வேண்டும். மேட்டூர் அணை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் ஏக்கர் சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட முன்வர வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்ட சட்டவிரோதமாக முயற்சிக்கும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தமிழகம் கடலிலே தண்ணீரை கலக்கச் செய்வதாக உண்மைக்கு புறம்பான பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனை முறியடித்து கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகள் நலன் கருதி, பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணலில் புதிய அணை கட்டுவதற்குத் திட்டமிட வேண்டும். மேகதாட்டு அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரச்சாரப் பயணத்தை வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி பூம்புகாரில் துவங்க உள்ளோம். காவிரி டெல்டா மாவட்டங்கள் வழியாக ஈரோடு, தருமபுரி, வேலூர், சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் வழியாகச் சென்று, செப்டம்பர் 24-இல் திருவாரூரில் இந்தப் பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம்.

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ஆர். திருப்பதி, மாநில கௌரவத் தலைவர் நன்னிலம் நடராஜன், மாநில துணைச் செயலாளர் சுவாமிநாதன், தஞ்சை மண்டலச் செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் சோமு பிள்ளை, கடலூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் கருணைநாதன், திருவாரூர் மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்தராஜ், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் நிழல்தாசன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Source link