“காவிரி நீர் விஷயத்தில் பெரும் சதி; தமிழக அரசுக்கு கூடுதல் எச்சரிக்கை தேவை” – அன்புமணி

சென்னை: “மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும், இதில் மத்திய அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும்தான். எனவே தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக அரசுக்கு ஆதரவான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பான எனது வினாவுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி,‘‘ காவிரி சிக்கல் தொடர்பாக 16.02.2026 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பிற பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு சான்றாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் ஒரு பத்தியையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஏதோ ஒரு பகுதியை மட்டும் காட்டி, காவிரியில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசின் ஆதரவுடன் மிகப்பெரிய சதிவலை பின்னப்படுவதைத் தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக் கூடாது என்பது தான் நடைமுறையாகும்.

உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப் பட்டுள்ளது. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

‘‘புதிய பாசன அணை அல்லது சிறிய அணைக்கட்டுகளை கட்ட வேண்டும் என்று மைசூர் அரசு விரும்பும் போது, அதற்கு பொருத்தமான விதிகளின்படி மெட்ராஸ் மாகாண அரசிடமிருந்து முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும். புதிய அணை தொடர்பான அனைத்து விவரங்களும் மெட்ராஸ் மாகாண அரசுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டு, பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்’’ என்று ஒப்பந்தங்களில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்களவையில் மத்திய அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 16.02.2026 ஆம் நாளிட்ட தீர்ப்பின் முதல் அம்சமாக, இந்த ஒப்பந்தங்களின் கூறுகள் இப்போதும் செல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது.

1947 ஆம் ஆண்டின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய அரசு முழுமையான இறையாண்மை பெற்ற அதிகார அமைப்பாக மாறியதால், மேலாதிக்கக் கோட்பாடு செயல்படுவதற்கு இனி இடமில்லை.

1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளின் இரு ஒப்பந்தங்களும் எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை; மேலும் அவை இந்தியாவின் இறையாண்மையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கவுமில்லை.

மாறாக, இந்த ஒப்பந்தங்கள் எந்தவொரு அரசியல் கூறுகளும் இல்லாத, பரந்த பொது நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தங்கள் செயலற்றவை என்றோ அல்லது முற்றிலும் காலாவதியானவை என்றோ ஆகிவிடாது) என்று கூறப்பட்டுள்ளது.

கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இந்த உண்மையை மறைத்து விட்டு, மேகேதாட்டு அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு கூறுவது திசை திருப்பும் செயல்.

அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் கர்நாடகத்தில் நடைமுறையில் உள்ள பாசனத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, வேறு எந்த புதிய பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மேகேதாட்டு அணையை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி எப்படி கூற முடியும்?

இந்த அடிப்படையில் தான் சிவசமுத்திரம் அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட போது, அது திருப்பி அனுப்பப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கஜேந்திர ஷெகாவத்தை, கடந்த 16.07.2021 ஆம் ஆண்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து மேகேதாட்டு அணை அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியது.

அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகேதாட்டு அணையை கட்ட முடியாது என்று உறுதியளித்தார். இவற்றுக்கெல்லாம் மாறான நிலைப்பாட்டை இப்போது நீர்வளத்துறை அமைச்சர் சவுத்ரி மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?

காவிரி பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு அனுமதி அளித்ததே தவறு ஆகும். தமிழகத்திற்கு எதிரான இந்த துரோகத்தை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை.

அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டுக்கு எதிராக இன்னொரு சதிவலையை மத்திய பாரதிய ஜனதா அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் இணைந்து பின்னுகின்றன. இந்த சதிவலை கிழித்தெறியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும்.

மாநிலங்களவையில் நான் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் ராஜ் பூஷன், கடந்த ஜூலை 16 ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 25.31 டி.எம்.சி நீரில் 3.37 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கர்நாடக அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று பிற்பகல் நிலவரப்படி 64 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. ஆனாலும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது என்றால் அங்குள்ள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு சட்டத்தை மதிக்காதவர்கள்; மனிதநேயமற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்போதே அரை டி.எம்.சி தண்ணீர் கூட கொடுக்காதவர்கள், மேகேதாட்டு அணையை கட்ட அனுமதித்தால் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும், இதில் மத்திய அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும் தான். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link