“தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?” – முதல்வர் விஜய்க்கு பெ.சண்முகம் கேள்வி!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று (28.07.2026) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களும் பதக்கங்களும் வழங்கினார். இந்த விழவில், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் முதலாவதாகவும், அதனை தொடர்ந்து தேசிய கீதம் இரண்டாவதாகவும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முன்னதாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை உத்தரவிட்டிருந்ததாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயரால் நிறுவப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில், அந்த பாடல் முதலில் பாடப்படாமல் இருப்பது அவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய அவமானம். இதை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையோ, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களையோ மதிக்காமல் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை முதலமைச்சரோ அல்லது அரசு சார்பில் செய்திக்குறிப்போ இதுவரை வெளியிடாமல் ஏற்கத்தக்கது அல்ல. இது போன்ற பிரச்சனைகளில் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்.

எனவே தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link