சென்னை: காவிரியில் அணை கட்ட தமிழகம் ஒப்புதல் தேவை என 2021ல் மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில் இன்று நிலைப்பாட்டை மாற்றியது ஏன் ? என மத்திய அரசுக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி சுப்ரீம்கோர்ட் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், ராஜ்யசபாவில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழகத்தின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் பார்லிமென்டிலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழக மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
