கிளைமாக்ஸ்-இல் பஞ்ச் மூலம் பதிலடி கொடுத்த ரஜினி! – ‘ஜெயிலர் 2’ விமர்சனம்!

பொதுவாக ரஜினிகாந்த் போலீஸ் வேடங்களில் நடித்த பெரும்பான்மையான படங்கள் பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை. சில படங்கள் மட்டும் விதிவிலக்காக பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்திருக்கிறது. அதில் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ரிடயர்டு போலீசாக நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் எங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டரானது. இது மிகப்பெரிய வசூல் சாதனையும் செய்தது. இதனாலையே இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்தா? 

முதல் பாகத்தில் வில்லன் விநாயகத்தையும் மகன் வசந்த் ரவியையும் கொன்றுவிடுவதோடு படம் முடிந்து விடுகிறது. இந்த பாகத்தில் தன் குடும்பத்தை கூட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் கோயம்புத்தூரில் மறைந்து வாழ்கிறார் ரஜினிகாந்த். அங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்து கொண்டு மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள் மிர்னா, பேரன் ரித்திக் ஆகியோரோடு தலைமறைவாக வாழ்ந்து வரும் அவருக்கு மீண்டும் விநாயகத்தின் சுப்பீரியர் வில்லன்கள் சுராஜ் வெஞ்சுரமூடு மற்றும் எஸ் ஜே சூர்யா மூலம் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இவர்கள் தனது கூட்டாளி விநாயகனை கொன்ற ரஜினியை தேடி வருகின்றனர். அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ரஜினி இவர்களிடம் இருந்து தப்பித்தாரா, இல்லையா? வில்லன் கும்பல் ரஜினியை என்ன செய்தார்கள்? பதிலுக்கு ரஜினி அவர்களை என்ன செய்தார்? என்பதே ஜெயிலர் 2 படத்தின் மீதி கதை. 

முதல் பாகத்தில் நாம் என்னவெல்லாம் ரசித்துப் பார்த்தோமோ, எந்த விஷயங்கள் எல்லாம் நமக்கு கூஸ்பம்ப்ஸ் மொமென்ட்களாக அமைந்ததோ, எந்த விஷயங்கள் எல்லாம் மாஸ் காட்டி தியேட்டரை விசில்களாலும் கைதட்டல்களாலும் அதிர செய்ததோ, அவை அனைத்தும் இந்த ஜெயிலர் 2 படத்திலும் வைத்து தியேட்டரை திருவிழா போல் மாற்றி இருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். தனக்கே உரித்தான பாணியில் டார்க் காமெடி திரைக்கதை மூலம் மீண்டும் ஒரு குடும்பங்கள் கொண்டாடும் வகையில் கேங்ஸ்டர் திரைப்படத்தை கொடுத்து வெற்றிப்பாதையில் வீரநடை போட்டு பயணித்து இருக்கிறார். படம் வழக்கம் போல் இயக்குநருக்கே உரித்தான பாணியில் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து போகப்போக வேகம் எடுத்து இரண்டாம் பாகத்திற்கு பிறகு படு வேகமாக நகர்ந்து குறிப்பாக இறுதி கட்ட காட்சிகளில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற தரமான பஞ்ச் வசனத்தோடு சிறப்பான முறையில் முடிந்து தியேட்டரில் பார்ப்பவர்களை கைதட்ட வைத்து ரசிகர்களையும் ஈர்த்து ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்திருக்கிறது. 

ரஜினிக்கு உரித்தான மாஸ் மொமென்ட்கள் எங்கெங்கு தேவையோ அந்தந்த இடங்களில் தேவையான அளவு சிறப்பான முறையில் ஸ்டேஜ் செய்து அதை சூப்பராக எக்ஸிக்யூட் செய்திருப்பது மீண்டும் மீண்டும் கூஸ்பம்ப்ஸ் கொடுத்திருக்கிறது. இன்றைய கால ஜென்சி ரசிகர்களும் அதேசமயம் குடும்ப ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ரசிக்கும்படி அவரவர்களுக்கான காட்சி அமைப்புகளோடு முழு படமாக இந்த திரைப்படத்தை கொடுத்து அனைவரும் எதிர்பார்த்தபடியான ஒரு தரமான ரஜினி படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சிறப்பான முறையில் கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார்.

முதல் பாகத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதுனாலயே மாஸ் காட்சிகளை தாண்டி பல காட்சிகள் நம்மை ரசிக்க வைத்தது. ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங். மாஸ் காட்சிகளை தாண்டி மற்ற சில காட்சிகள் மட்டும் ஆங்காங்கே சற்று அயற்சியை கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் சில பாடல்கள் வேகத்தடையாகவும் அமைந்திருக்கிறது. மேலும் முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் பல இடங்களில் ஆங்காங்கே சற்று ஃபிளாட்டாக இருப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இருந்தும் இவை அனைத்தும் ரஜினியின் மாஸ் காட்சிகளால் மறக்கடிக்கப்பட்டு படத்துடன் நம்மை ஒன்றை வைத்திருப்பது இந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் வழக்கம் போல் தனது காந்த பார்வையாலும் மைல்டு சிரிப்பாலும் அலட்டிக்கொள்ளாத உடல் மொழியாலும் நம்மை மீண்டும் கவர்ந்து இழுத்து இருக்கிறார். ரஜினியின் சினிமா வரலாற்றிலேயே ஒரு முழு கேங்ஸ்டர் படத்தில் சண்டை போட்டால் எந்த அளவுக்கு மாஸ் காட்ட முடியுமோ அதை சண்டை போடாமலே காண்பித்து ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்து விசில்களால் தியேட்டரை அதிர செய்திருக்கிறார். ஆங்காங்கே அவரின் டிரேட் மார்க் காமெடிகளும் மாஸ் காட்சிகளும் அவருக்கே உரித்தான பாணியில் சிறப்பான முறையில் கொடுத்து தான் இன்னமும் சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

நாயகி ரம்யா கிருஷ்ணன் வழக்கமான நாயகியாக வழக்கமான வேலையை செய்து விட்டு சென்று இருக்கிறார். மருமகள் மிர்னா சில காட்சிகளே வருகிறார், நிறைவாக செல்கிறார். பேரன் ரித்விக், கொடுத்த காட்சிகளை சிறப்பான முறையில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு யோகி பாபு சிறப்பான முறையில் காமெடி செய்து சிரிக்க வைத்திருக்கிறார். வசனம் பேசுவதைக் காட்டிலும் உடல் மொழியால் பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. 

சிறிய வில்லன் மற்றும் காமெடியனாக வரும் நமோ நாராயணன் சிறப்பான பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் சிரிப்பொலிகள்தான். இவரும் ரஜினி மற்றும் யோகி பாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டு பார்ப்பவர்களை கலகலப்பாக்கியுள்ளனர். அதேபோல் வில்லன் சுராஜ் வெஞ்சரமூடு தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை சிறப்பான முறையில் கொடுத்து வில்லனாக மிரட்டியுள்ளார். அதே சமயம் ஆங்காங்கே சில இடங்களில் காமெடியும் செய்து சிரிப்பு காட்டியிருக்கிறார். பேயாக வந்து நடனமாடும் விநாயகன் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். மெயின் வில்லன் எஸ் ஜே சூர்யா தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்து சிறப்பான முறையில் பங்களிப்பு கொடுத்து இருக்கிறார்.

வில்லியாக வரும் வித்யா பாலன், மாஸ் வில்லத்தனம் காட்டி அதேசமயம் கிளாமரும் காட்டி கவர்ந்திருக்கிறார். மற்றொரு வில்லன் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெறுகிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பகவதி பெருமாள், பி எல் தேனப்பன், ஜெத்தின் சர்மா, இன்ஸ்டாகிராம் புகழ் தாய் மண்ணே சந்தோஷ், ஹக்கீம் ஷாஜகான், ராமச்சந்திரன் துரைராஜ், கோட்டையம் நசீர், சுனில் சுக்காதா, தமிழ் உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்றிருக்கின்றனர். குறிப்பாக சிறப்பு தோற்றத்தில் வந்து மாஸ் காட்டி இருக்கிறார்கள் மோகன்லால், விஜய் சேதுபதி, ஜாக்கி சராஃப், சிவராஜ்குமார், பூர்ணா, ராஜேஷ் மாதவன், நோரா பதேஹி மற்றும் ஹிருத்திக் ரோஷன். இவர்கள் அனைவரின் ஸ்கிரீன் பிரசன்ஸும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்து ரசிகர்களை ஆரவார செய்திருக்கிறது. 

அனிருத் இசையில் ‘அலா போலேலோ’ பாடல் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. அதேபோல் சில மெலடி பாடல்களும் லேட் பிக்கப் ஆக மனதில் பதிகிறது. குறிப்பாக பின்னணி இசையில் வழக்கம் போல் மாஸ் காட்டி படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று மிகப் பெரிய வெற்றி படமாக மாற்றி இப்படத்திற்கு இன்னொரு ஹீரோவாகவே மாறி இருக்கிறார். குறிப்பாக ‘டைகர் கா ஹூக்கும்’ திரையரங்கை கைத்தட்டல்களாலும் விசில்களாலும் அதிர செய்திருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தி படத்தோடு நம்மை ஒன்ற வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். 

ஒரு ரஜினிகாந்த் படம் என்றாலே என்னவெல்லாம் நாம் எதிர்பார்த்து செல்வோமோ அது அனைத்தும் இந்த திரைப்படத்தில் எதிர்பார்த்தது போல் அமைந்து குடும்பத்தோடு கொண்டாடும் ஒரு மாஸ் மசாலா ஆக்‌ஷன் டார்க் காமெடி திரைப்படமாக அமைந்து தியேட்டரை  திருவிழா போல் உண்டாக்கியிருக்கிறது. ஆங்காங்கே சில பல வேகத்தடைகள் தென்பட்டாலும் அவை அனைத்தும் ரஜினியின் ஆரா மற்றும் மாஸ் மொமென்ட்ஸ்களால் மறக்கடிக்கபட்டு ரசிகர்களை கொண்டாட்டம் மனநிலைக்கு எடுத்துச் சென்று இருக்கிறது. 

பின் குறிப்பு – படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ரஜினியின் ஒரு பஞ்சு வசனம் இன்றைய காலகட்டத்தில் ரஜினி மேல் வைத்த விமர்சனத்திற்கு பதிலடியாக அமைந்திருப்பது கான்ட்ரவர்சி நிறைந்த கூடுதல் சிறப்பு. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்

ஜெயிலர் 2 – பக்கா மாஸ்