த.வெ.க.,வின் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை, கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன் என நாஞ்சில் சம்பத் ஆவேசமாக கூறியுள்ளார்.
த.வெ.க இயக்கம் அல்ல, ரசிகர் மன்றம். இது கட்சி அல்ல, கார்பரேட் கம்பெனி. ஆதவ் போன்றவர்களின் அதிகார தோரணை என்னை அச்சப்பட வைக்கிறது. தமிழ்நாடு இவர்கள் கையில் சென்றால் என்னாகும் என்று எண்ணி பார்க்கிறேன். நெஞ்சம் பதறுகிறது! ஆகவே… தமிழ் பற்றுக்காகவும்… தமிழ்நாட்டின் நலனுக்காகவும்.. இந்த போலி கூட்டத்திலிருந்து விடை பெறுகிறேன்! நான் வெளியே வருவது விலகல் அல்ல… விடுதலை என நாஞ்சில் சம்பத் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
இந்தநிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் ஊடகப் பக்கத்தில், “தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த ஆதவ் அர்ஜூனாவை நான் குறைத்து பேசியதாக சிலக் குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம். த.வெ.க என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை; கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது,” எனப் பதிவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த @AadhavArjuna -வை நான் குறைத்து பேசியதாக சிலக்…
— Nanjil Sampath (@NanjilPSampath) October 25, 2026
முன்னதாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான த.வெ.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் நாஞ்சில் சம்பத் பெயர் இல்லாமல் இருந்தது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் “போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..” என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து நாஞ்சில் சம்பத்திடம் த.வெ.க தலைமை பேசியதாக கூறப்பட்ட நிலையில், “உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி விஜய். இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி விஜய் அவர்களின் த.வெ.க ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!” என தெரிவித்திருந்தார்
