புதுடில்லி: குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமே காங்கிரசின் நோக்கம். அக்கட்சிக்கு தீர்வு தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டில்லியில் பிரதமர் இல்லம் முன்பு நேற்று முன்தினம் காங்கிரஸ் நடத்திய போராட்டம் தொடர்பாக அவர் அளித்த பேட்டி: டில்லியில் பிரதமர் முன்பு அனுமதியில்லாமல் போராட்டம் நடந்த இடத்திற்கு அமைச்சரை அரசு அனுப்பிய போது, பார்லியில் விவாதம் நடத்த வேண்டும் என்பது அவர்களின் முதல் நிபந்தனையாக இருந்தது. அதற்கு அரசு ஒப்புக் கொண்டது.இப்போது பார்லியில் விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கும் போது, மேலும் பல நிபந்தனைகளை விதித்து அவர்கள் குழப்புகின்றனர்.
நீட் தேர்வை பயன்படுத்தியும், மாணவர்களை பயன்படுத்தியும், தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. பார்லியை குழப்புகிறது. உண்மை வெளிவந்து விடும் என்பதால், பார்லியில் விவாதத்திற்கு வர மறுக்கிறார்கள். அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் விவாதத்தின் போது வெளியே வரும். அதன் பிறகு, அக்கட்சியால் மேலும் போராட்டத்தை தொடர முடியாது. அவர்கள் இடையூறு செய்கிறார்கள்.
விவாதம் நடத்த விரும்பவில்லை. இளைஞர்கள் தொடர்பான பிரச்னையை அரசியலாக்குகிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். அரசு பதிலளிக்கும். அதனால் விவாதத்திற்கு வர வேண்டும். பதிலளிக்க தயாராக இருக்கும் அமைச்சர்களை கூச்சலிட்டு அடக்குவதில் பயனில்லை. காங்கிரஸ் கட்சியின் நோக்கம் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமே. அவர்களுக்கு தீர்வுகள் தேவையில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
