வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்; வருவாய் ஆய்வாளர் ஹேமலதா கைது

நமது நிருபர்

மணப்பாறையில் வாரிசு சான்றிதழுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஹேமலதா கைது செய்யப்பட்டு உள்ளார்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி ( 30). இவரது தந்தை கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார். இதனால் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ஈஸ்வரி அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.

இது தொடர்பாக வி.பெரியப்பட்டி முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க விருப்பமில்லாத ஈஸ்வரி, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அறிவுறுத்தலின் படி, 4 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை ஈஸ்வரி வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவிடம் வழங்கினார். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெறும் போது, மறைந்து இருந்த திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஹேமலதாவை கையும் களவுமாக கைது செய்தனர்.

Source link