“கூடுதல் கட்டணம்; 400 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள்”

தொடர் விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்துத் துறையால் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தமிழக  அரசு  தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், “தொடர் விடுமுறையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் நடைமுறையில் உள்ள  கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்தும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகார்கள் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் 10.09.2026 அன்று அமைக்கப்பட்டு, உடனடியாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்படி, 10.09.2026 முதல் 12.09.2026 அதிகாலை வரை தமிழ்நாடு முழுவதும் 2,379 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இத்தணிக்கையின் போது, பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் நேரடியாக பயணக் கட்டணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட இடங்களில், அவ்வாறு வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிறப்பு தணிக்கையின் போது, 400 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் விளக்கம் கோரி அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விதிமீறல்களுக்காக ரூபாய் 10 லட்சத்து 31 ஆயிரத்து 500 இணக்கக் கட்டணம் (அபராதம்) நிர்ணயிக்கப்பட்டு. அதில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 500 உடனடியாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூபாய். 15 லட்சத்து 33 ஆயிரத்து 220 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதிச் சான்றிதழ் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 4 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யவும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், அனுமதி, வரி, தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்தவும். 16.09.2026 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கையை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, வாகன உரிமையாளர்களால் ரத்து செய்யப்படும் நேர்வில், அப்பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய அந்த வாகன உரிமையாளர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் அனுமதிச்சீட்டின் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், 10.09.2026 முதல் 16.09.2026 வரை பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் தங்குதடையின்றி இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பொது மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link