“கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன”

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகப் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை வந்தடையும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக 47 வழித்தடங்களில் 508 பேருந்துகள் மூலம் 2,107 பயண நடைகளும், (Trip) கிளாம்பாக்கம் வழியாக 9 வழித்தடங்களில் 130 பேருந்துகள் மூலம் 1,362 பயண நடைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் கூடுதலாக, 14.09.2026 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், 15.09.2026 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், விமான நிலையம், கிண்டி,வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை பாரிமுனை, பட்டாபிராம், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

அதே சமயம் ரயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில் மூலம் சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களில், அவர்களின் தேவைக்கேற்ப மாற்று வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எனவே, தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள். தங்கள் ஊர்களிலிருந்து சென்னை வந்து சேருவது முதல், சென்னையில் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று சேருவது வரை தடையற்ற பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link