கூடுதல் வரிகளை பிரிக்ஸ் நாடுகள் நீக்க வேண்டும்; பியூஸ் கோயல் வலியுறுத்தல்

புதுடில்லி: வர்த்தகத்திற்கு தடைகளாக இருக்கும் வரிகளை பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் நடந்த பிரிக்ஸ் வர்த்தக் கூட்டத்தில் அவர் கூறியதாவது; பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடுகளும், தங்களின் வர்த்தக சந்தைகளை பரஸ்பரமாக திறக்க வேண்டும். வர்த்தகத்திற்கு தடைகளாக இருக்கும் வரிகளை நீக்க வேண்டும். குறிப்பாக, மூலப்பொருட்கள் மற்றும் அரியவகை கனிமங்களுக்காக பரஸ்பர சந்தைகளை திறக்க வேண்டும். இருநாடுகளிடையே தடையில்லாமல் வர்த்தகம் நடக்கும் போதுதான், விநியோகச் சங்கிலி வலுவடையும்.

இந்தியாவின் யுபிஐ (UPI) மூலம் ஆண்டுதோறும் ரூ.25,000 கோடி பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இது சர்வதேச பரிவர்த்தனை அளவில் பாதிக்கும் மேல் உள்ளது. ஏற்கனவே 11 நாடுகளில் யுபிஐ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையேயான கட்டண முறைகளை இணைக்க வேண்டும். உள்ளூர் நாணயங்களிலேயே வர்த்தகம் செய்ய வேண்டும். விவசாயம், மருந்துகள், இன்ஜினியரிங் போன்ற துறைகளில் கூட்டுத் திறன்களை உருவாக்க வேண்டும்.

பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. உலகின் பாதி மக்கள் தொகையையும், 40 சதவீத ஜிடிபியையும் (GDP) கொண்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Source link