“கூட்டத்தில் அனைத்தையும் விரிவாக விவாதிப்போம்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து இக்கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை த.வெ.க. அமைச்சர்கள் நேரில் வழங்கி வருகின்றனர். அதே சமயம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த த.வெ.க. கூட்டணியின் 2வது ஆலோசனைக் கூட்டத்தில், த.வெ.க தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டுவது, கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை முறைப்படி நியமிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விசிக தலைமை அலுவலகத்திற்கு இன்று (05.09.2026) வருகை தந்த த.வெ.க அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராஜ் ஆகியோர் விசிக தலைவர் தொல். திருமாவளவனை, சந்தித்து, த.வெ.க ஆதரவுக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “வரும் 9ஆம்  தேதி நான்கு மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் அனைத்து கட்சிகளையும் நாங்கள் அழைத்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில்  முதலமைச்சர் விஜய்யும், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து ஒரு முக்கிய முடிவை எடுப்பார்கள். அதற்காக திருமாவளவனுக்கு இன்று அழைப்பு கொடுத்திருக்கிறோம். 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்தும் விஷயங்கள் தெரிய வரும். 

கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம். ஐ.யு.எம்.எல். தலைவர் 8ஆம் தேதி வருகிறார். அவர்களையும் நாங்கள் அழைக்கப் போகிறோம். 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அனைத்தையும் விரிவாக விவாதிப்போம். கூட்டணியின் எதிர்காலத் திட்டங்கள், அதற்கான செயல்திட்டங்கள், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட அனைத்தையும் அன்றைய தினம் முதலமைச்சரும், கூட்டணி கட்சித் தலைவர்களும் இணைந்து முடிவு செய்வார்கள். 2029 தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அதற்காகத்தான் கூட்டணியை உருவாக்கப் போகிறோம்.” எனத் தெரிவித்தார்.

Source link