கேப்டன் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-வது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது.
இப்படத்தில் கேப்டனின் இளைய மகனான சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த மணிசியோன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கோலாகல பூஜை
இன்று காலை சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முறைப்படி கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.
தொடர்ந்து, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் போர்டை அடித்து துவங்கி வைத்தார். டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், இயக்குநர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் அர்வி ஆகியோரும் இவ்விழாவை சிறப்பித்தனர்.
இரண்டு படங்களுடன் முழு வீச்சில் கேப்டன் சினி கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர் எல்கே சுதீஷ் எம்.பி தயாரிப்பில், கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்தடுத்த பிரம்மாண்ட தயாரிப்புகளுடன் தமிழ் சினிமாவில் அதிரடி முத்திரை பதித்து வருகிறது.
ஏற்கனவே இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்து வரும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘புரொடக்சன் நம்பர் 10’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் இன்றிலிருந்து அதிவேகமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழு
இப்படத்திற்கு ‘மாநகரம்’, ‘டானாக்காரன்’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பணியாற்றிய திறமைமிக்க பிரசன்ன குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தின் மற்ற முக்கிய நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
மாலை 6 மணிக்கு ‘டைட்டில் லுக்’
இன்னும் பெயரிடப்படாத இந்த ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6:00 மணிக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களின் வாயிலாக வெளியிட உள்ளார்.
சிவகார்த்திகேயன் இந்த அறிவிப்பை வெளியிடுவதால், சமூக வலைத்தளங்களில் இப்போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
