சமையல் எரிவாயு (LPG) உருளை விநியோகத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி சீரடைந்துள்ளதை தொடர்ந்து, கிராமப்புற நுகர்வோருக்கான கேஸ் புக்கிங் கால இடைவெளியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
முன்னதாக, சமையல் கேஸ் உருளை சப்ளையில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் புக்கிங் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஒரு சிலிண்டர் பதிவு செய்து அது கிடைத்த பிறகு, இந்த குறிப்பிட்ட கால அவகாசம் முடியும் வரை அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாத நிலை நடைமுறையில் இருந்தது.
தற்போது இந்தியாவில் எல்பிஜி உருளை விநியோகம் சீரடைந்துள்ளதாலும், வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேர வேண்டிய சிலிண்டர் நிலுவைகள் (Pending Deliveries) பெருமளவில் குறைந்துள்ளதாலும் இந்த விதிகளில் மத்திய அரசு தளர்வு அளித்துள்ளது.
அதன்படி, இனி கிராமப்புற வாடிக்கையாளர்களும் நகர்ப்புறங்களைப் போலவே 25 நாட்கள் இடைவெளியில் புதிய சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறையை அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தத் திடீர் தளர்வு மற்றும் அறிவிப்பால், கிராமப்புறங்களில் கேஸ் உருளைக்காக நீண்ட நாட்கள் காத்திருந்த நுகர்வோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
