முன்னாள் திமுக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
சென்னையில் மயிலாப்பூர், அடையாறு, அண்ணா நகர், திருவான்மியூர், ஆரியபுரம் உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கே.என். ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான ‘டிவிஎச்’ (TVH) என்ற கட்டுமான அலுவலகத்திலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கான பின்னணி
பல்வேறு நிறுவனங்களை மிரட்டி கட்சி நிதி வசூலித்ததாகவும், அதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாகச் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது.
முழுமையான சோதனைக்குப் பிறகே எந்தெந்த நிறுவனங்களை மிரட்டிப் பணம் பெறப்பட்டது மற்றும் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
