கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மூச்சு திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதியில் இருந்து அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வி.எஸ். பாபு உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வி.எஸ். பாபு. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடுமையான மூச்சு திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையில் ஒரு வாரம் ஆகியும் வி.எஸ். பாபு இன்னமும் டிஸ்சார்ஜ் செய்யப்படாத நிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
உடல்நிலை குறித்து அறிக்கை
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்துறை நிபுணர்கள் குழு வி.எஸ். பாபுவின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவருடைய மருத்துவ அளவீடுகள் சீராக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தவெகவினர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் தொகுதி
இதனையடுத்து அவர் பரிபூரணமாக உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டுமென தவெகவை சார்ந்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திமுகவில் இருந்த வி.எஸ். பாபு, நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கியதும் அதில் இணைந்தார். தொடர்ந்து அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான வி.எஸ். பாபு நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவாக செயல்பட்டு வரும் வி.எஸ். பாபு, நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று வந்தார். இதனிடையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வி.எஸ். பாபுவுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நலம் விசாரித்த முதல்வர்
இப்படியான நிலையில் அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. முன்னதாக முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் சென்றுள்ள நிலையில், தொலைப்பேசி வாயிலாக வி.எஸ். பாபுவின் உடல் நிலை குறித்து விசாரித்தார். அவருடைய குடும்பத்தினரிடமும் முதல்வர் பேசியதாக கூறப்பட்டது.
பட்டு வேட்டி சட்டையில் சி.எம் விஜய்…பாஜக எம்.எல்.ஏ சொன்ன கமெண்ட்
அமைச்சர் அருண்ராஜ்
இதற்கிடையில் நேற்றைய தினம் அமைச்சர் அருண்ராஜ், வி.எஸ். பாபுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் வி.எஸ். பாபு வீடு திரும்புவார் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
