விநாயகர் ஊர்வலத்தில் மோதல்- ஒருவர் கொ@லை; சென்னையில் அதிர்ச்சி

சென்னை ராமாபுரம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று (14/09/2026) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கோவில்களில் சிறப்புப் பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக சாமி ஊர்வலம் நடைபெற்றது.

சாமியை தேரில் வைத்து எடுத்துச் செல்லும் பொழுது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு தெருவின் பாதி பகுதிக்கு மட்டும் சாமி கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஊர்வலம் பாதியிலே திரும்பியதாகக் கூறப்படுகிறது.

தெருவில் முழு பகுதிக்கும் சாமி ஊர்வலம் வர வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதில் இரு தரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இருதரப்பினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் தடுக்க முற்பட்ட எம்டிசி ஓட்டுநர் சீனிவாசன் என்பவரை ஆனந்த் என்ற நபர் மார்பு பகுதியில் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுயநினைவு இழந்து  சீனிவாசன்  கீழே விழுந்துள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலானது பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட ஆனந்த் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேரை ராமாபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Source link