தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் அரசின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, புதிய தலைமைச் செயலகம் அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தலைமைச் செயலகம் தமிழக அரசின் நிர்வாக பாரம்பரியத்துடன் நீண்ட காலமாக தொடர்புடையதாக இருந்தாலும், அதன் மொத்த நிலப்பரப்பில் குறைந்த பகுதியே நிர்வாக பயன்பாட்டில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தை கைப்பற்ற புது வியூகம்! இனி அதிமுக நிலைமை என்னவாகும்!
எந்தெந்த இடங்கள் பரிசீலனையில்?
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னையில் நான்கு இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம் கோயம்பேடு பட்டினப்பாக்கம் போர் ஷோர் எஸ்டேட் நந்தம்பாக்கம்இந்த நான்கு இடங்களில், கோயம்பேடு பழைய பேருந்து நிலையம் அமைந்திருந்த பகுதி அதிக வாய்ப்புள்ள இடமாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
கோயம்பேடு ஏன் முக்கிய தேர்வு?
பழைய கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருந்த பகுதியில் சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. புதிய தலைமைச் செயலகம் போன்ற மிகப்பெரிய அரசு நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு இந்த நிலப்பரப்பு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும், கோயம்பேடு சென்னையின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. மெட்ரோ ரயில் வசதி, பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலைகள் என பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எளிதாக வந்து செல்லக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
இதனால், புதிய தலைமைச் செயலகத்தை கோயம்பேட்டில் அமைத்தால் நிர்வாக ரீதியாகவும், போக்குவரத்து வசதி அடிப்படையிலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற இடங்களில் என்ன சிக்கல்?
பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் இருந்தாலும், கடலோரப் பகுதி என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதி மீனவ குடியிருப்புகள் தொடர்பான பிரச்னைகளும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.
நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருப்பதுடன், விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இருப்பினும், சுற்றியுள்ள கல்விநிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த இடத்திலும் சவால்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகமும் பரிசீலனையில் உள்ள நிலையில், நிலப்பரப்பு, போக்குவரத்து வசதி, நிர்வாக பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.
தற்போதைய நிலையில் கோயம்பேடு முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
