கேரளம் மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூரின், கைபமங்கலம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பனம்பிக்குனு எனும் இடத்தில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. அந்த பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலுமாக நொறுங்கியது.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் திண்டுக்கல்லில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவ சஞ்சித், மதுரையைச் சேர்ந்த பிரசாந்த், சந்தோஷ், உள்ளிட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு 11.40 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, சாலைப் பணிகள் நடப்பது குறித்து அப்பகுதியில் முறையான அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படவில்லை என்றும், அவ்வாறான அறிவிப்புப் பலகைகள் இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட வாய்ப்பிருந்திருக்கும் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
