சென்னை: தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் இன்று அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: போராட்டம் என்று அழைத்தீர்கள், இது போராட்டம் அல்ல;
மாநாடு மாதிரி எவ்வளவு கூட்டம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன். அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் உங்களது சகோதரர்களாக தான் நிற்கிறோம்; அமைச்சர் என்பது எல்லாம் இரண்டாவது தான். உங்கள் வீட்டு பிள்ளைகளாக தான் நிற்கிறோம்.
16 நாட்களாக பொது அமைதி, போக்குவரத்துக்கு எந்த தொந்தரவும் வராமல் ராணுவ கட்டுப்பாட்டு உடன் போராட்டம் நடத்திய உங்களை அனைவரையும் நாங்கள் தலை வணங்குகிறோம். கஜானவே இல்லாமல், காணாம போய்விட்டது. மனிதாபிமானம், கருணை, மனசாட்சி காணாமல் போகவில்லை.
தமிழக முதல்வர் விஜயின் மனதுக்குள் உங்கள் மீதான அன்பும், அக்கறையும் அப்படியே இருக்கிறது. இனி செயலில் காட்டுவோம். நாங்கள் வார்த்தைக்கு சொல்லவில்லை; உங்கள் வீட்டு பிள்ளைகளாக நாங்கள், உங்களுக்கு வேலை செய்ய தான் வந்து இருக்கிறோம். போராடுவது உங்கள் உரிமை; அதை நிறைவேற்றி தருவது எங்கள் கடமை.
கஜானால ஒன்னும் இல்ல!
அமைச்சர் ஆனந்த் பேசியதாவது: போராட்டம் நடத்தினால் கடந்த ஆட்சிகளில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்; ஆனால் முதல்வர் விஜய் அப்படி இல்லை. சென்ற ஆட்சி காத்தில் இருந்தவர்கள் கஜானாவை காலி செய்துவிட்டு போய்விட்டார்கள்; கஜானால ஒன்னும் இல்ல, இருந்திருந்தா செஞ்சிருப்போம்.
நாங்கள அதை சரி செய்து ஒரு ரூபாய் கூட வரி பணத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் நிற வேற்றி தருவோம். எதையெல்லாம் உடனடியாக செய்து தர முடியுமோ அதை உங்களோடு ஆலோசித்து செய்து தருவோம். இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.
தீர்வு காண…
அமைச்சர் ஆதவ் பேசுகையில், ”பிரச்னைக்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை, தீர்வு காண வந்துள்ளோம்; செய்து கொடுக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருந்தாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் இருக்கிறது. உங்களோடு நாங்கள் இருக்கிறோம்” என்றார்.
