டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜீத் திப்கே செய்தியாளார்களிடம் கூறுகையில், “போராட்டத்தை திட்டமிட்டு சீர்குலைப்பதற்காக வெளியாட்கள் அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் கடந்த ஒரு மாதமாக இங்கு அமைதியாக அமர்ந்து போராடி வருகிறோம். ஒரு மாதத்தில் இது போன்ற எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் இப்போது இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடுவதற்காக பாஜகவால் வெளியிலிருந்து குண்டர்கள் அனுப்பப்படுகிறார்கள். பாஜகவைச் சேர்ந்த இந்த நபர்கள் தான் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.
காவல் துறையினர் இங்கு லாரிகளில் கற்களைக் கொண்டு வருகிறார்கள். பாஜக குண்டர்கள் வந்து கல்வீசிவிட்டு, பின்னர் சிஜேபியினர் மீது பழி போடுகிறார்கள். போலீசாரின் தடியடி (லாத்தி சார்ஜ்) குறித்து நான் ஏற்கனவே பேசியுள்ளேன். அது மிகவும் கொடூரமானது, இதற்கு காரணமான காவல் அதிகாரிகளை நாங்கள் நீதிமன்றத்தில் நிறுத்துவோம். இன்று (23.07.2026) எங்கள் போராட்டத்தின் 34வது நாளாகும். சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இன்று அவரது உண்ணாவிரதத்தின் 26வது நாளாகும், எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். ஆனால், சோனம் சாரின் உயிரை எங்களால் இழக்க முடியாது என்பதால், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
சி.ஜே.பி.யினர் நடத்தும் போராட்டம் காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களான லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாராகம்பா சாலை, உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்), சேவா தீர்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம் (சென்ட்ரல் செக்ரடேரியட்), ஐடிஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய 16 நிலையங்கள் இன்று காலை 07:30 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
