நியூயார்க்: பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் 3வது இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் மழையை பொழிந்தன.
இங்கிலாந்தின் அதிரடி துவக்கம்:
ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டி ரைஸ் முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து 18வது நிமிடத்தில் இ கான்சா ஒரு கோல் அடித்தார்.
சாகாவின் ‘ஹாட்ரிக்’ மேஜிக்:
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சாகா 37, 45+1 மற்றும் 87வது (பெனால்டி) நிமிடங்களில் கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்து அசத்தினார்.
பிரான்ஸின் பதிலடி:
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே 48 மற்றும் 66வது நிமிடங்களில் இரட்டை கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். பார்கோலா 54வது நிமிடத்திலும், டெம்பேலே கூடுதல் நேரத்தில் (90+6 நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.
வெற்றியை உறுதி செய்த பெலிங்ஹாம்:
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+8 நிமிடம்) இங்கிலாந்தின் பெலிங்ஹாம் அடித்த கோல் மூலம் இங்கிலாந்தின் வெற்றி 6-4 என உறுதியானது. பரபரப்பான இந்த கோல் மழையின் முடிவில், பிரான்ஸின் சவாலை முறியடித்த இங்கிலாந்து அணி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது.
இன்று பைனல்:
ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான பைனல் இன்று நடக்க உள்ளது. நள்ளிரவு 12.30 க்கு தொடங்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, உலகக் கோப்பையை வெல்லும்.
