கோவில்களில் தரிசனத்திற்கு பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்; அமைச்சர் ரமேஷ்

திருச்சி: இந்து அறநிலையத்துறையில் நிதி இல்லை என்று சொல்லக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ரமேஷ் திருச்சியில் பதிலளித்தார்.

அவர் கூறியதாவது; எத்தனை கோவில்கள் கட்டுமானப் பணிகள் பாதியில் இருக்கிறது, எத்தனை கோவில்களில் இன்னும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை நான் சட்டசபையிலேயே பதிவு பண்ணியிருக்கிறேன். இதற்கான தரவுகள் இருந்திருந்தால், அவர் (சேகர்பாபு) சட்டசபையிலேயே விளக்கமாக சொல்லி இருக்கலாமே.

ஏற்கனவே பாதியில் நிற்கும் பணிகள், துவங்காத பணிகளுக்கே ரூ.400 கோடி நிதி கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கேற்றாற் போல, எங்களுடைய பட்ஜெட்டில் அடிப்படை தேவைகளுக்கான கட்டுமானப் பணிகள், கும்பாபிஷேகப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். தேவையில்லாத வணிக ரீதியிலான பணிகளை மேற்கொள்ளவில்லை. அடிப்படை தேவைகளுக்கான பணிகளை எடுத்துள்ளோம்.

கோவில்களில் வழங்கப்படும் சேவைகளுக்கும் கூடுதலாக பணம் கேட்டாலோ, இலவசமாக வழங்க வேண்டிய சேவைகளுக்கு பணம் கேட்டாலோ, மக்கள் கொடுக்க வேண்டாம். யாராவது பணம் கேட்டால், ஆதாரத்துடன் அந்த நபர் மீது புகார் அளியுங்கள். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்களை, கோவில்களில் தரிசனம் செய்ய, சிறப்பு வழிகளில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link