கோவை மாநகர காவல் ஆணையருக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் நோட்டீஸ்

கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதிக்கு, தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவையில் அண்மையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட புலனாய்வு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையருக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாதிய பாகுபாடு காரணமாக  கோவையைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிற விவகாரம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாணவனி ன் மரணம் மற்றும் அது சார்ந்த பின்னணிகள் குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து எஸ்சி, எஸ்டி ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் மீது காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட நடவடிக்கைகள் மற்றும் வழக்குப்பதிவு விபரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையை அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவனின் தற்கொலை விவகாரம் கோவையில் ஏற்கனவே விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், தற்போது எஸ்சி, எஸ்டி ஆணையம் நேரடியாகக் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி அறிக்கை கேட்டுள்ளது கோவை காவல் துறை வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.