அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் சக்கரவர்த்தி இன்று (அக்டோபர் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சக்கரவர்த்தி பேசுகையில், “தமிழக அரசையும் தற்போதைய ஆட்சியையும் கண்டித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2026 ஆம் ஆண்டு வி.கே. சசிகலா எங்கள் கட்சியில் பணியாற்ற விரும்புவதாக கூறி சேர வந்தார். மேலும் கட்சியின் பொதுச் செயலர் பதவியையும் எடுத்துக் கொண்டார். கட்சியை வழிநடத்துகிறேன் என்று தான் என்னிடம் கூறினார். ஆனால் அதன்படி செய்யவில்லை. தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. எங்கள் யாரையும் சந்திக்கவில்லை, தொண்டர்களையும் சந்திக்கவில்லை. அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.
சசிகலா தேர்தலுக்காக மட்டும் எங்களை பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டார். எங்கள் கட்சியின் வேட்பாளர்களும், தொண்டர்களும் அவரை சந்திக்க முடியாததை நினைத்து வருந்துகின்றனர். எனவே அவர் கட்சியை எப்படி முன்னெடுத்து செல்வர் என மனவேதனை எங்களுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து தொண்டர்களிடம் ஆலோசித்தோம். அதன்படி, சசிகலா பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலாவின் நீக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மேலும், கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல புதிய பொதுச்செயலர் விரைவில் நியமிக்கப்படுவார். எங்கள் பணியை நாங்கள் தொடர்ந்து செய்வோம். அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம்” இவ்வாறு சக்கரவர்த்தி கூறினார்.
