பனாஜி: கோவாவில் எரிசக்தி தொழில்நுட்பம் தொடர்பான மாநாடு நேற்று தொடங்கியது. இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட எரிசக்தி நிபுணர்கள் பங்கேற்று உள்ளனர். மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: போர் காரணமாக ஈரானை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது. இதற்கு முன்பு 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி காஸை (சமையல் காஸ்) இறக்குமதி செய்து வந்தோம். தற்போது 41 நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறோம்.
அமெரிக்காவிடம் இருந்து 10% அளவுக்கு மட்டுமே எல்பிஜி காஸை இறக்குமதி செய்து வந்தோம். தற்போது இது 67% ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டில் தினமும் 34,000 டன் எல்பிஜி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இது தற்போது 55,000 மெட்ரிக்டன்னாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
