சென்னை: சட்டம்- ஒழுங்கு குறித்து அமைச்சர்களும், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களும் மாறி மாறி குற்றம்சாட்டியதால் கடும் அமளி ஏற்பட்டது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
* எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்க, இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது. நன்றாக தயாரித்து விட்டு வாருங்கள்.
* சபாநாயகர் பிரபாகர்: முதல்வர் விஜய், கைகளை கட்டிக் கொண்டு, அமைதியாக கூர்ந்து வார்த்தைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். பதிலளிக்க அவர் தயாராகவே வந்திருக்கிறார்.
* உதயநிதி: இன்னும் தி.மு.க., தான் ஆட்சி செய்கிறது என்பதை மனதில் இருந்து எடுத்து விடுங்கள். தி.மு.க.,வை நோக்கியே எதிர் கேள்வி கேட்காமல், சம்பந்தமில்லாத குட்டிக் கதைகள் சொல்லாமல், எனது கேள்விகளுக்கு நேரடியாக முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
* அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: முதல்வர் விஜய்க்கு யாரும் உபதேசம் செய்யத் தேவையில்லை. 2023,- 2024ல், முதல்வராக ஸ்டாலின் இருந்த போது தாக்கல் செய்யப்பட்ட காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில், 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுகளும், 1,597 கொலைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளும் ஒரே எண்ணிக்கையில் கொலைகள் நடக்குமா?
* சபாநாயகர் பிரபாகர்: முந்தைய ஆட்சியில் நடந்ததை ஒப்பிட்டு, இன்றைய ஆட்சியாளர்கள் பேசுவதில் தவறு இல்லை.
* அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: கடந்த தி.மு.க., ஆட்சியில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘முஸ்லிம் கைதிகளை வெளியே விட்டால், சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படும்’ என, கூறப்பட்டிருந்தது. தி.மு.க., ஆட்சியில் டி.ஜி.பி., கூட நியமிக்கப்படவில்லை.
* உதயநிதி: காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு, அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் பதில் சொல்வதில்லை; அமைச்சர்கள்தான் பேசுகின்றனர்.
* சபாநாயகர் பிரபாகர்: அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. எந்த அமைச்சர் வேண்டுமானாலும் பேசலாம்.
* உதயநிதி: டி.ஜி.பி., நியமனத்தில், மத்திய அரசின் தலையீடு இருந்தது. மாநில உரிமையை பாதுகாப்பதில் தி.மு.க., அரசு உறுதியாக இருந்ததால், டி.ஜி.பி., நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது.
* முதல்வர் விஜய்: எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு, வரும் திங்கள் கிழமை பதில் சொல்கிறேன். நான் இங்கே இல்லாவிட்டாலும், யார் யார் என்ன கேட்கின்றனர் என்பது எனக்கு வந்து விடும். அதற்கு தெளிவான விளக்கத்தை தருகிறேன். அப்போது யாரும் எழுந்து ஓடி விடக் கூடாது.
* உதயநிதி: யாரும் ஓடி விடக் கூடாது என்று சொல்லி விட்டு, முதல்வர் ஓடி விட்டார்.
அமைச்சர் ராஜ்மோகன்: தோட்டக்கலை தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தி.மு.க.,வில் தோட்டக் கொலை என்பது நடந்தது. 100 நாட்களில் பாரபட்சம் இல்லாமல், நேர்மையான ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்வராக உதயநிதி இருந்தபோது, அவருக்குப் பதிலாக, முதல்வராக இருந்த ஸ்டாலின், மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
