சட்டப்பேரவை விதிகளை மீறி ஆதாரமற்ற அவதூறுகளைப் பேசியதாக முதலமைச்சர் விஜய் மீது திமுக துணை கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின் போது முதலமைச்சர் விஜய் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய பேரவைக் கூட்டத்தில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “எனது நீண்ட சட்டமன்ற அனுபவத்தில் பல முதல்வர்களைப் பார்த்துள்ளேன்; அவர்கள் அனைவரும் மாண்புடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர்.
ஆனால், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், பலமுறை விளக்கம் அளிக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் குறித்தும் முதலமைச்சர் ஆதாரமின்றிப் பேசியுள்ளார். எனவே காவல்துறை மானியம் தவிர்த்து மிசா மற்றும் மறைந்த முரசொலி மாறன் குறித்து அவர் பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
ஆனால், முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் பேரவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் முழக்கங்களை எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், அவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் எனக் கோரினார். சபாநாயகரின் எச்சரிக்கையையும் மீறி திமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையிலிருந்து உடனடியாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை அவரது அறையில் நேரில் சந்தித்த திமுக துணைக் கொறடா கோவி. செழியன் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், “நிரூபிக்கப்படாமல் கைவிடப்பட்ட சர்க்காரியா ஆணைய விவகாரத்தைப் பேசியது, அவையில் தற்போது இல்லாத தலைவர்களான முன்னாள் முதல்வர் கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோரை விமர்சித்தது மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிப் பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு முற்றிலும் முரணானது. எனவே பேரவை விதிகளை மீறிய முதலமைச்சர் விஜய் மீது உடனடியாக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
சட்டசபையில் நான் செய்தது..!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்..!! பரபரப்பு அறிக்கை..!!
Next Post
Tue Sep 8 , 2026
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 67 பேர் இறந்தனர். இச்சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், “கள்ளச்சாராயம் விற்பனைக்கு பெயர்போன இடங்களில் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மதுவிலக்கு, வருவாய் மற்றும் காவல்துறை […]

