எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை முடக்கம்: ரூ.12.53 கோடி சீர்கேட்டை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அறிக்கை

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மெட்ரிக் முன்படிப்பு மற்றும் பின்படிப்பு உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்துவதில் கடுமையான சீர்கேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 46% பள்ளிகள் இத்திட்டங்களைப் பயன்படுத்தாதது, போலி சான்றிதழ்கள் மூலம் நிதியைப் பெற்றது மற்றும் ஒரே நபருக்கு இருமுறை நிதி வழங்கியது உட்பட ரூ.12.53 கோடி அளவிலான முறைகேடுகள் மற்றும் தாமதங்கள் இதில் கண்டறியப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் கத்தோலிக்க ஆதிதிராவிடர் (எஸ்சிசி) மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள், தேவையற்ற தாமதங்கள் மற்றும் நிதியிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். போதிய விழிப்புணர்வு இல்லாததால் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்திட்டங்களின் பலனைப் பெற முடியாமல் விடுபட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள்:

மாணவர்களுக்குப் போய் சேராத உதவித்தொகை

பள்ளிகள் புறக்கணிப்பு: 2019-22 காலக்கட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், சராசரியாக 46% பள்ளிகள் பிரி மெட்ரிக் படிப்பு (Pre-Matric) உதவித்தொகை திட்டத்தையும், 39% போஸ்ட் மெட்ரிக் படிப்புகளுக்கான உதவித்தொகை திட்டத்தையும் பயன்படுத்தவே இல்லை.

விடுபட்ட தகுதியுள்ள மாணவர்கள்: 2019 முதல் 2023 வரையிலான காலத்தில் தகுதியுள்ள எஸ்சி மாணவர்களில் 21% முதல் 52% பேர் வரை மெட்ரிக் முன்படிப்பு திட்டத்திலும், 20% முதல் 29% பேர் வரை மெட்ரிக் பின்படிப்பு திட்டத்திலும் விடுபட்டுள்ளனர். பழங்குடியின (எஸ்டி) மாணவர்களில் முறையே 35% முதல் 55% பேரும், 30% முதல் 42% பேரும் இத்திட்டங்களில் சேர்க்கப்படவில்லை.

படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள்: 2017-22 காலகட்டத்தில் உதவித்தொகை பெற்ற 2,901 மாணவர்கள் அடுத்த ஆண்டிலேயே படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர் அல்லது திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள்

சான்றிதழ்கள் இன்மை: தணிக்கைக்காக ஆய்வு செய்யப்பட்ட 9,076 விண்ணப்பங்களில், 2,569 விண்ணப்பங்களில் (28%) வருமானச் சான்றிதழ் அல்லது சாதிச் சான்றிதழ் இணைக்கப்படாமலேயே உதவித்தொகை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ஒதுக்கீடு முறைகேடு: தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) மாணவர் சேர்க்கை முறையான வழிகாட்டுதல்களின்படி நடைபெறாததால், தகுதியற்ற பல மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.12.53 கோடி நிதியிழப்பு மற்றும் தாமதங்கள்

வழங்குவதில் தாமதம்: 2017 முதல் 2023 வரை 36,510 வழக்குகளில் ரூ.7.28 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்குவது ஒரு மாதம் முதல் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட வங்கி கணக்குகள்: வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் அல்லது கணக்குகள் மூடப்பட்டதால் 3,530 பயனாளிகளுக்கான ரூ.1.61 கோடி உதவித்தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இரண்டு முறை வழங்கப்பட்ட நிதி: 2022-23 தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை (TNeGA) தரவுகளின்படி, 160 எஸ்சி மாணவர்களுக்கு மாநில அரசின் 40% பங்குத் தொகை இரண்டு முறையும், 253 எஸ்டி மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் இரண்டு முறையும் தவறாகக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதியில் முறைகேடு: 2021-23 காலக்கட்டத்தில், மத்திய அரசு நிதி பெறத் தகுதியற்ற 2,576 கத்தோலிக்க ஆதிதிராவிடர் (எஸ்சி.சி) மாணவர்களுக்கு மத்திய அரசின் பங்கான 60% தொகையிலிருந்து ரூ.3.64 கோடி தவறாக வழங்கப்பட்டுள்ளது.

காரணங்களும் குறைபாடுகளும்

வலுவான இணையதளக் கட்டமைப்பு இல்லாதது, இணையவழி குறைதீர்ப்பு மையம் செயல்படாதது மற்றும் சமூகத் தணிக்கை நடத்தப்படாததே இந்த சீர்கேடுகளுக்கு முக்கியக் காரணம் என சி.ஏ,ஜி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தனியார் கல்வி நிறுவனங்களில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆண்டு தணிக்கைகள் மற்றும் ஆய்வுகள் முறையாக நடத்தப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link