ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், ஆயுத பூஜையின் போது, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி அங்கிதா சர்மா, ‘ஏ.கே., – 47’ ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி பல முறை சுட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், ஆயுத பூஜை நடந்தது. அப்போது, போலீஸ் வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டன.
நீல நிற பட்டுப்புடவை அணிந்து விழாவில் பங்கேற்ற மாவட்ட எஸ்.பி., அங்கிதா சர்மா, ஏ.கே-., – 47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி பல முறை சுட்டார். தொடர்ந்து, கூடுதல் எஸ்.பி., கீர்த்தன் ரத்தோரும் துப்பாக்கியால் சுட்டார்.
ராய்ப்பூர், பிலாஸ்பூர், ராய்கர், துர்க் உட்பட பிற மாவட்டங்களிலும், ஆயுத பூஜையின் போது போலீஸ் அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த விவகாரம் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடப்பதாக துணை முதல்வர் அருண் சாவ் தெரிவித்தார்.
ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆயுத பூஜையின் போது, வெறும் சத்தம் மட்டுமே வரக்கூடிய வெற்று தோட்டாக்களை பயன்படுத்தி சுடுவது வழக்கமான சடங்கு தான். நிஜ தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவதில்லை’ என்றார்.
