ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனச்சரகங்களில் புலி, சிறுத்தை,யானை ,கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கின்றன.
இந்நிலையில் இங்கு வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் பங்களாதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (36) என்பவரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கிக் கொன்றது. அதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து ஆசனூர் பகுதியில் சிறுத்தை தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ஆசனூர் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராமங்கள் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒங்கல்வாடி கிராமதத்தை சேர்ந்த வீரன் (55) என்பவரது மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்து மாட்டு கன்றுகுட்டியை கடித்து கொன்றுள்ளது. அங்கிருந்து சென்ற சிறுத்தை பழைய ஆசனூர் கிராமத்தை சேர்ந்த மாதேவப்பா (45) மாட்டு கொட்டகைக்குள் புகுந்து அங்கு இருந்த கன்று குட்டியை கொன்றது. பங்களாதொட்டி கிராமத்தில் புகுந்த சிறுத்தை ராமன் என்பவரது மாட்டு கொட்டகைகுள் புகுந்து கன்று குட்டியை கடித்துள்ளது.
சத்தம் கேட்டு எழுந்து வந்த ராமன் சத்தம் போடவே சிறுத்தை கன்று குட்டியை விட்டு விட்டு இருளில் சிறுத்தை மறைந்தது. சிறுத்தை கடித்ததில் அந்த கன்று குட்டி படுகாயம் அடைந்துள்ளது. அதேபோல் இன்று ஆசனூர் வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள புதர் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.தொடர்ந்து சிறுத்தை அட்டகாசம் செய்து வருவதாகவும் வனத்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்காமல் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.எனவே அலட்சியம் காட்டாமல் மனிதர்களையும் கால்நடைகளையும் தொடர்ச்சியாக வேட்டையாடுவதும் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
