‘சத்துணவில் சிக்கன் பிரியாணி… ‘-அமைச்சர் ராஜ்மோகனின் புது யோசனை சாத்தியமா?

தமிழகப் பள்ளி மாணவர்களின் காலை உணவு மற்றும் மதியச் சத்துணவுத் திட்டங்களில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், வாரம் ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்த ஆலோசனையைத் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக  தமிழக பள்ளிக்கல்வி மற்றும் சத்துணவுத் துறை சார்ந்த அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த இத்தகைய ஒரு புதிய கோரிக்கையை முதல்வர் விஜயிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் பள்ளிக் குழந்தைகளுக்கான உணவுத் திட்டம் என்பது வெறும் பசி ஆற்றுவது மட்டுமல்லாமல், கல்வி கற்கும் விகிதத்தை அதிகரிப்பதற்கான ஒரு முதன்மைக் கருவியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் நீதிக்கட்சியால் அறிமுகப் படுத்தப்பட்டு, பின்னர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் இது மதிய உணவுத் திட்டமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இத்திட்டத்தை ‘சத்துணவுத் திட்டமாக’ மாற்றி சத்துக்களைக் கூட்டினார். அதனைத் தொடர்ந்து கலைஞர் உணவோடு சேர்த்து முட்டை வழங்கும் முறையைக் கொண்டு வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாரந்தோறும் விதவிதமான கலவை சாதங்கள் மற்றும் முட்டைகளை வழங்கும் திட்டமாக இதனை மேலும் நவீனப்படுத்தினார். 

இந்த வரிசையில், தற்போதுள்ள கோதுமை உப்புமா, ரவை உப்புமா போன்ற வழக்கமான காலை உணவுகளில் இருந்து குழந்தைகளுக்கு ஒரு விடுதலை கிடைக்க வேண்டும் என்றும், அவர்களின் காலை உணவை அறுசுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே, வாரம் ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் கேட்பதற்குப் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இதனை நடைமுறைப் படுத்துவதில் சில முக்கியமான சவால்கள் உள்ளன. சிக்கன் பிரியாணி போன்ற ஒரு மதிய உணவை லட்சக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் தோறும் வழங்குவதற்குப் பெருமளவிலான கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படும். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய கல்வி மற்றும் சத்துணவுக்கான நிதிப் பங்கீடுகள் தடையின்றி கிடைப்பதில் உள்ள சிக்கல்களும் உள்ளது.

மத்திய அரசின் நிதிப் புறக்கணிப்பால் அரசு பாதிக்கப்படுவதை விட, தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினரின் அறிவார்ந்த முதலீடுதான் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், கல்வி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது அறிவின் மீதான முதலீடு என்பதால், பட்ஜெட்டில் இதற்கான கூடுதல் நிதியைக் கோரவும், தேவையெனில் சட்டப்பூர்வமாகப் போராடவும் அரசு தயாராக உள்ளது.

தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் முந்தைய அரசின் திட்டங்கள் முடக்கப்படும் என்ற விமர்சனம் பொதுவாக எழும். ஆனால், தற்போதைய தவெக அரசு முந்தைய ஆட்சிகளின் நல்ல திட்டங்களைப் பகமை பாராட்டாமல் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் அமைச்சர் ராஜமோகன் குறிப்பிட்டுள்ளார். 

உதாரணமாக, அம்மா உணவகங்களில் மக்களின் வருகை அதிகரித்து, உணவின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன், அதேபோல், இந்தச் சிக்கன் பிரியாணி திட்டமும் பல துறைகள் சம்பந்தப்பட்டது என்பதால், நிதிநிலை மற்றும் விநியோகச் சங்கிலியை ஆராய்ந்து, முதல்வர் விஜய் இதனைப் பரிசீலனை செய்து வருவதாக உறுதிபடக் கூறியுள்ளார்.

Source link