புதுடில்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள தலபிரா 11 நிலக்கரி சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதில் முறைகேடுநடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, மன்மோகன் சிங்கிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டு முகாந்திரமும் இல்லை என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், 2015 ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிபிஐ அறிக்கையை நிராகரித்ததுடன், மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து மன்மோகன் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி. மோகனா அமர்வு, மன்மோகன் சிங்கிற்கு எதிரான வழக்கை முடித்து வைத்தனர். மேலும். சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், சிபிஐயின் கண்டுபிடிப்புகளை நிராகரிக்கவோ அல்லது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலுவான காரணங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: இரு தரப்பு வழக்கறிஞர்களின் உதவி உடன், சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கைகளை நாங்கள் ஆய்வு செய்தோம். சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிராகரித்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலுவான காரணங்கள் எதுவும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்.
மன்மோகன் சிங் துரதிர்ஷ்டவசமான மறைவின் காரணமாக, இந்த மேல்முறையீடு பயனற்றதாகக் கருதப்பட்டு தள்ளுபடி செய்யலாம். ஆனால், சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையையும் ஆய்வு செய்துள்ளோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், மன்மோகன் சிங்கிற்கு எதிரான சிறப்பு நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். முன்னாள் பிரதமருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளையும் முறைப்படி முடித்து வைத்தனர்.
