சந்திரபாபு நாயுடு டூ விஜய், ஜெகன் மோகன் டூ ஸ்டாலின்: தெற்கில் உருவாகும் புதிய கூட்டணி; 2029 தேர்தலுக்கு காய்களை நகர்த்தும் தலைவர்கள்?

எழுதியவர்: லிஸ் மேத்யூ

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியும் வரவிருக்கும் பல முக்கிய தேர்தல்களுக்காக களம் கண்டு வரும் நிலையில், தென்னிந்தியாவின் சில முன்னணி பிராந்தியக் கட்சிகள் 2029 மக்களவைத் தேர்தலை மையமாகக் கொண்டு உருவாகும் சூழலுக்கு ஏற்ப தங்களின் அரசியல் செல்வாக்கை விரிவாக்க முயன்று வருகின்றன.

ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க

அரசியல் ஆதிக்கம் கொண்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் நகர்வுகளை எல்லாம் பா.ஜ.க உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அதேவேளையில், புதிய அரசியல் சீரமைப்பு குறித்த தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தாத ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியை காங்கிரஸ் கட்சி உற்றுநோக்கி வருகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ஐ நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ அரசு நிறைவேற்ற உதவியதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்து, அதை  தவறு என்று ஜெகன் மோகன் சமீபத்தில் கூறியிருப்பது இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே புதிய நம்பிக்கையை மீண்டும் துளிர்க்க செய்துள்ளது. 

இந்த சட்டம் பிரதமர், பிரதமரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவால் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கு வழிவகை செய்கிறது. இதனால் இது அரசின் ஆதிக்கம் நிறைந்த அமைப்பாக மாறுகிறது. ஒரு முக்கிய விவகாரத்தில் ஜெகன் மோகனின் இந்த நிலைப்பாடு மாற்றத்தையும், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான ஜோசப் விஜய்யுடனான சந்திரபாபு நாயுடுவின் சமீபத்திய சந்திப்பையும் சில அரசியல் பார்வையாளர்கள் தங்களின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான புதிய மறுசீரமைப்பின் சிக்னல்களாக பார்க்கிறார்கள்.

சந்திரபாபு நாயுடு – விஜய் ஆச்சரிய சந்திப்பு

தசரா பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் நடத்தப்பட்ட முக்கிய பண்பாட்டு நிகழ்வான ‘விஜயவாடா உத்சவ் 2.0’ நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு சந்திரபாபு நாயுடு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.

சந்திரபாபு நாயுடு, விஜய் உடனான தனது சந்திப்பை கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, அரசியல் எல்லைகளைத் தாண்டி தென்னகத் தலைவர்களை ஈர்ப்பதற்கான ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார். நாயுடு இங்கு அரசியல் பலத்தைப் பெற முயல்கிறார். தென்னகக் கூட்டணி என்ற அவரது முயற்சிகள் பா.ஜ.க தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளன. அதாவது தான் எந்த பக்கத்திலிருந்தும் விளையாடும் ஆற்றலும் திறனும் கொண்டவர் என்றும், எதிர்காலத்தில் ஒரு அழுத்த குழுவாக தன்னால் உருவாக முடியும் என்றும் அவர் உணர்த்தியுள்ளார் என்று ஆந்திர பா.ஜ.க-வில் பணியாற்றிய மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“நாயுடுவின் இந்த நகர்வின் நேரமும் மிக முக்கியமானது. பல விவகாரங்களில் பா.ஜ.க அழுத்தத்தை சந்தித்து வரும் ஒரு சூழலில் அவர் இந்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளார். பா.ஜ.க அவரை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டதில்லை. அரசியல் கூட்டணி என்பது ஒரு சுயநல நலன்களுக்கான பந்தம் ஆகும்” என்றார்.

தெருக்களில் மோடி அரசுக்கு எதிராக இளைஞர்களும் மாணவர்களும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வரும் நேரத்தில், விஜய்யுடனான நாயுடுவின் சந்திப்பு ஒரு முக்கியச் செய்தியை அனுப்பியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்றைய தேதியில், ‘ஜென் ஜி’ தலைமுறையின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ள கூடியவர்கள் என்.டி.ஏ கூட்டணியில் யாருமில்லை. தற்போதைய அரசியல் சூழலும் தேசிய தலைநகரில் நாம் காண்பதும், தமிழக அரசியலில் ஜென் ஜி இளைஞர்கள் விஜய்யையும் த.வெ.க-வையும் ஆட்சிப் பீடத்தில் அமர வைத்த சம்பவத்தோடு தொடர்புடையது. விஜய் உடனான சந்திரபாபு நாயுடுவின் சந்திப்பும் அதன் பிம்பமும் ‘என்னால் உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது’ என்ற செய்தியை இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது. இது நிச்சயமாக என்.டி.ஏ-வில் அவரது இடத்தை பலப்படுத்தும்” என்றார்.

இருப்பினும், சந்திரபாபு நாயுடு – விஜய் சந்திப்பானது உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே நடந்தது என்று தெலுங்கு தேசம் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லவ் கிருஷ்ணா தேவராத் தெரிவித்துள்ளார். “அரசியலைத் தாண்டி, தற்போது நாயுடு தனது மனதிற்கு நெருக்கமான நதிகள் இணைப்புத் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

சூப்பர் எல் நினோ மற்றும் நமது விவசாயத் துறையில் அதன் தாக்கத்தால் இதன் அவசியம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதை அவர் அனைத்து மேடைகளிலும் வலியுறுத்தி வருகிறார். நதிகள் இணைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா முதலமைச்சர்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளனர். இது ஆந்திரப் பிரதேசத்துடன் ஒடிசா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் பயனளிக்கும். இது சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கானது” என்றார்.

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு விவசாயிகளை மையமாக கொண்ட முன்முயற்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் கிருஷ்ணா கூறினார். “அப்போதைய (ஜெகன் தலைமையிலான) அரசின் தவறான நிர்வாகத்தால் 2019 – 2024 இடையே எந்தவொரு நீர்ப்பாசனத் திட்டமும் தொடங்க முடியாததால், ஈடுசெய்யும் வகையில் பல திட்டங்களை நாங்கள் கையிலெடுத்துள்ளோம். அனைத்துத் திட்டங்களுக்கும் தாயாக நதிகள் இணைப்புத் திட்டம் உள்ளது. அதனால்தான் நாயுடு இந்த நகர்வுகளை மேற்கொண்டார்” என்று அவர் மேலும் கூறினார்.

தவிக்கும் நிலையில் தி.மு.க 

கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக தேர்தலைத் தொடர்ந்து, விஜய் தலைமையிலான ஆட்சியில் இணையக் காங்கிரஸ் கட்சி தன்னுடனான உறவை துண்டித்துக் கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத தி.மு.க, தனது எதிர்கால அரசியல் பாதையை இன்னும் உறுதி செய்யவில்லை.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2029-ஆன் ஆண்டிற்குள் கொண்டு வருவதற்காக தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவை முன் நகர்த்துவதற்கு திராவிடக் கட்சியின் உதவியை நாட பா.ஜ.க முற்பட்டபோதிலும் இந்த மசோதா ஏப்ரல் சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. பா.ஜ.க-வுடன் கைகோர்ப்பதால் ஏற்படும் அரசியல் விளைவுகள் குறித்த குழப்பத்தில் தி.மு.க தொடர்ந்து நீடிக்கிறது.

“காங்கிரஸை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க-வுக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் பா.ஜ.க-வுடன் நேரடியாக இணைவது சிக்கலாக இருக்கும். அவர்களுக்கு முன்னால் உள்ள சிறந்த வழி (காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க அல்லாத கட்சிகளுடன்) மூன்றாவது அணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே ஆகும். மேலும், த.வெ.க-வால் வாழ்வியல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டின் கட்சிகள் எங்களுடன் இணையும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தி.மு.க உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம், மக்களவை தி.மு.க தலைவர் கனிமொழி, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி அணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் என்.சி.பி தலைவர்கள் சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க எம்பிக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இக்கட்சிக்கு மக்களவையில் 22 எம்.பி-க்களும் மாநிலங்களவையில் 8 எம்.பி-க்களும் உள்ளனர். எஸ்.ஐ.ஆர் முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என அக்கட்சியின் தலைமை வலியுறுத்தியது. இந்த கோரிக்கையை பா.ஜ.க ஏற்கனவே நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை வேகமாகச் சரிந்து வருவதைப் பற்றியும், ஞானேஷ் குமாருக்கு பா.ஜ.க தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு பற்றியும் கட்சி ஆழ்ந்த கவலையில் இருப்பதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link